அண்ணனுக்கு ஜே – அரசியல் அதிரடி…

இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் , பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘அண்ணனுக்கு ஜே’.

இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ராஜ்குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

கதநாயகனாக தினேஷ் நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ராதாரவி, மயில் சாமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அரோல் கொரேலி இசையமைப்பில் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக இப்படத்தில் அறிமுகமாகிறார்.

படத்தின் டிரைலரையும், பாடல்களையும் பார்க்கும் போது இது ஒரு அரசியல் அதிரடி படம் என்பதைப் புரிய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் சமீப காலத்தில் அரசியலை மையமாகக் கொண்ட படங்கள் அதிகமாக வந்ததில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும் எனத் தெரிகிறது.

இப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் தினேஷ் பேசகையில்,

“இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கும் வெற்றிமாறன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மஹிமா அருமையாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அரோல் கொரேலி 7 பாடல்களுக்கு நன்றாக இசையமைத்துள்ளார். ராதா ரவி அவர்களுடன் நடித்தது மிக சந்தோஷமாக இருந்தது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்,” என்றார்.

இயக்குனர் ராஜ்குமார் பேசும் போது,

“முதலில் வெற்றிமாறன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு பக்கபலமாக கூட இருந்துள்ளார். நடிகர் தினேஷ் அவர்களுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். நடிகை மஹிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார். மயில் சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்போதும் நகைச்சுவை நடிகர்களாக பல படங்களில் நடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்துள்ளனர்,” என்றார்.

இசைஅமைப்பாளர் அரோல் கொதேலி பேசுகையில்,

“இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த வெற்றிமாறன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மற்ற படங்களை விட இந்தப் படத்தில் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளேன். 7 பாடல்களும் ஒவ்வொரு விதமாக இருக்கும்,” என்றார்.

மகிமா நம்பியார் பேசும் போது,

“வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இந்தப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி.மேலும் இந்தப் படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்,” என்றார்.

வெற்றிமாறன் பேசுகையில்,

“தினேஷ் அவரது முழு எனர்ஜி வாய்ந்த நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளார்கள். இயக்குனர் ராஜ்குமார் நல்ல படத்தைத் தந்துள்ளார். படம் வெற்றி அடைய வாழ்த்துகள்,” என்றார்.

Read Previous

‘நரகாசூரன்’ கதை யாருக்கும் தெரியாது ?

Read Next

பொறுக்கிஸ் அல்ல நாங்கள் – எந்த மாதிரியான படம் ?…

Most Popular