கடிகார மனிதர்கள் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மாதிரியான ஒரு சில யதார்த்த படங்கள் வருவது ஆறுதலான விஷயம்.

இயக்குனர் வைகறை பாலன், கமர்ஷியலான படங்களைக் கொடுத்து கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்லாமல் நடுத்தர வயது கதாபாத்திரத்தை கதையின் நாயகனாக வைத்து படத்தை எடுத்திருப்பது பாராட்ட வைக்கிறது.

கடைகளுக்கு சைக்கிளில் சென்று பிஸ்கட்டுகளை வினியோகிக்கும் தொழில் செய்யும் கிஷோர், மனைவி லதா ராவ், மூன்று குழந்தைகளுடன் வாடகைக்கு வீடு தேடி அலைகிறார். ஒரு வீட்டில், தனக்கு இரண்டு குழந்தைகள்தான் இருக்கிறது என பொய் சொல்லி வாடகைக்கு வீடு எடுத்து தங்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது என்ற உண்மை வீட்டு உரிமையாளருக்குத் தெரிய வருகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

தமிழ் சினிமாவில் வயதான நடிகர்களைக் கூட மேக்கப் போட்டு கல்லூரிக்குச் செல்லும் இளைஞராகக் காட்டுவார்கள். இல்லை என்றால் 25 வயது இளைஞர்களை வைத்து மட்டுமே அதிகமான படங்களை எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஒரு சராசரியான ஏழை குடும்பத் தலைவன் கதாபாத்திரத்தையே படத்தின் கதாநாயகனாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய உயிரோட்டமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கிஷோர்.

கிஷோரின் மனைவியாக லதா ராவ், பக்கத்து வீட்டுக்காரர்களாக கருணாகரன், பிரதீப், வீட்டு உரிமையாளராக பாலா சிங், வீட்டுத் தரகராக சிசர் மனோகர், கருணாகரன் காதலியாக ஷெரின் என படத்தில் நடித்துள்ள அனைவருமே அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ஐந்தாறு வீடுள்ள அந்த வீட்டு வளாகத்திற்குள் நாமும் ஒரு குடித்தனக்காரராக இருந்து பார்க்கும்படியான ஒரு உணர்வைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பத்திலிருந்தே மிகவும் யதார்த்தமாக நகர்ந்த படத்தை கிளைமாக்சில் சினிமாத்தனமாக அமைத்துவிட்டார் இயக்குனர்.

Read Previous

எங்க காட்டுல மழை – விமர்சனம்

Read Next

மணியார் குடும்பம் – விமர்சனம்