குணச்சித்திர, நகைச்சுவை நடிகரான தம்பி ராமையா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் அவரது மகன் கதாநாயகனாக நடித்துள்ளார். அப்பா, மகன் கூட்டணியில் ஒரு கலகலகப்பான குடும்பம் பிளஸ் நகைச்சுவைக் கதையைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்.
ஊரில் உள்ள மணியக்கார குடும்பத்து வாரிசு தம்பி ராமையா. ஆனால், கையில் செலவுக்குக் கூடப் பணமில்லாத வாழ்ந்து கெட்ட குடும்பம். இருந்தாலும், அது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் மனைவி, அம்மா, மகன் ஆகியோருடன் நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார் தம்பி ராமையா. தன் மகன் உமாபதிக்காக தங்கை மகள் மிருதுளாவை பெண் கேட்கச் செல்கிறார். அங்கு அவரது குடும்ப நிலையைப் பற்றி ஏளனம் செய்து பேசுகிறார் மச்சான் ஜெயப்பிரகாஷ். இதனால், ஆத்திரமடையும் உமாபதி, நல்ல நிலைக்கு வந்து முறைப்பெண் மிருதுளாவைத் திருமணம் செய்து கொள்வேன் என சபதம் எடுக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
கிராமம், குடும்பம், முறைப் பெண், காதல், வில்லன் என வழக்கமான தமிழ் சினிமாவுக்கு உரிய ஒரு கதையைத்தான் தேர்வு செய்திருக்கிறார் தம்பி ராமையா. படத்திற்குத் தூணாக இருப்பது அவருடைய கதாபாத்திரம்தான். ஒன்றுமில்லை என்றாலும் வறட்டு கௌரவத்துடன் நிஜ வாழ்வில் வாழும் மனிதர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
பொறுப்பில்லாத கிராமத்து இளைஞராக உமாபதி. அந்த மாதிரி கதாபாத்திரத்தில், இயல்பாக இருந்தாலே போதும் நடிப்பது தெரியாது. அவரும் நடிப்பில் குறை வைக்காமல் செய்ய முயற்சி செய்கிறார். நடனத்தில் முன்னணி ஹீரோக்களுக்கும் போட்டியாக இருப்பார் போலிருக்கிறது. வசனத்தை இன்னும் தெளிவாக உச்சரிக்கக் கற்றுக் கொண்டால் அவரும் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.
நாயகி மிருதுளா முரளி, நாயகன் உமாபதியைக் காதலிப்பதோடு நிற்காமல் அவர் உயர்வதற்கும் உறுதுணையாக நிற்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, ஜெயப்பிரகாஷ், ராதாரவி, ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, பவண், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீஜா, யாஷிகா ஆனந்த் என பலர் நடித்திருக்கிறார்கள்.
மகனின் நடனத் திறமையை வெளிக் காட்ட வேண்டும் என்றே இசையமைப்பாளர் தம்பி ராமையா பாடல்களை அமைத்திருக்கிறார்.
சராசரியான கதையாக இருந்தாலும் இன்னும் கலகலப்பாக நகர்த்தியிருக்கலாம். இடைவேளைக்குப் பின் திரைக்கதை இங்கும், அங்குமாக அலைகிறது. அதுதான் படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிட்டது.