2019ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் படங்களுக்குள் கடும் போட்டி இருக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்தின் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சிம்புவும் பொங்கலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அவர் நாயகனாக நடிக்க சுந்தர் .சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று சிம்பு அறிவிப்பு செய்துள்ளார்.
ஏற்கெனவே, அந்தப் படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுவதாக சிம்பு ரசிகர்கள் விஷாலைத் திட்டி பல வீடியோக்களை வெளியிட்டனர். அவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக சிம்புவின் இன்றைய அறிவிப்பு அமைந்துள்ளது.
சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகராக இருந்தவர். ரஜினிக்கும் அவர் தீவிர ரசிகர்தான். இப்போது அவர்களது படங்களுடன் போட்டி போடுவது அவருடைய நிலையை அவர் வெளிப்படுத்துவதாக உள்ளது.
