தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெறாத ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளிவந்துள்ளது என்று சொல்லலாம்.
கமர்ஷியல் சினிமா, கோடி வசூலில் திளைத்திருக்கும் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட படங்களும் வருகிறது என்பதே ஆச்சரியமான விஷயம்தான்.
அப்படிப்பட்ட ஆச்சரியத்துடன் தமிழ் நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்மும்டி ஏற்று நடித்தது அதைவிட ஆச்சரியம்.
இயக்குனர் ராம் எந்த சமரசமும் இல்லாமல் படத்தைக் கொடுத்திருக்கிறார். வசூல்களும், கோடிகளும் அவரைப் போன்ற இயக்குனர்களை இன்னும் பாதிக்கவில்லை என்பதே தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதுதான்.
மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிறுமி சாதனா. மகளை விட்டுப் பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிடுகிறார் அவரது அம்மா. தன் மகளுக்கு நல்ல அப்பாவாக இருக்க ஆசைப்படும் மம்முட்டி, மகளை அழைத்துக் கொண்டு மலைப் பிரதேசத்தில் யாருமே இல்லாத இடத்தில் தனி வீடு ஒன்றை வாங்கி அங்கு வாழ ஆரம்பிக்கிறார். அந்த வீட்டை அபகரிக்க நினைப்பவர்களின் செயலால் வீட்டைப் பறி கொடுப்பவர், பின்னர் சென்னை வந்து வேலை தேடி, டிரைவர் ஆகிறார். மகளது உணர்வுகளில் வித்தியாசத்தைப் பார்ப்பவர், ஒரு கட்டத்தில் அப்படிப்பட்ட மகளுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தர முடியாமல் தற்கொலைக்கு முயல்கிறார். பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
நடுத்தர வயது அப்பா கதாபாத்திரத்தில் மம்முட்டி. தன்னை அப்பாவாக ஏற்க மறுக்கும் மகளின் பாசம் தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கியதிலும், மகள் தன் மீது பாசம் செலுத்த ஆரம்பித்த பின், அவருக்காக எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்வதிலும் அப்பா பாசமும் சாதாரணமானதல்ல என்று புரிய வைக்கிறார்.
சாதனா, படம் முழுவதும் கை, கால்களை மடக்கி, வாயை திருப்பிக் கொண்டு எப்படி இப்படி நடித்திருப்பார் என்பது ஆச்சரியம். ஒவ்வொரு காட்சியிலும் அவருக்கு ஏதாவது நடந்து விடுமோ என்ற பதைபதைப்பு நமக்கும் வருகிறது.
அஞ்சலி கொஞ்ச நேரமே வருகிறார். படத்தில் இவர்தான் சாதனாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்வார் என எதிர்பார்த்தால் அவருடைய கதாபாத்திரத்தில் திருப்புமுனையை வைத்துள்ளார் இயக்குனர்.
திருநங்கை அஞ்சலி அமீர் கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்குப் புதியது. இவருடைய கதாபாத்திரத்திற்கான முடிவையும் யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள். தலைப்பின் அர்த்தத்திற்கு இவரது கதாபாத்திரமும் கூட பொருத்தமாக அமையும்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பின்னணி இசை பிரமாதம். பல காட்சிகள் வசனம் இல்லாமல் யுவனின் பின்னணி இசையால் நம்மை என்னவோ செய்கிறது. பாடல்களில் கொஞ்சம் ஏமாற்றிவிட்டது ராம் – யுவன் கூட்டணி.
மலைப் பிரதேசத்தில் தனி வீடு வாங்கும் அளவிற்கு இருக்கும் மம்முட்டி, பின்னர் வேலை தேடி அலைவது, டிரைவராக வேலை பார்ப்பது முரணாக இருக்கிறது. முதலில் வரும் தனிமையான படத்தை வேறு தளத்தில் காட்டினாலும், அதுவே நம்மை கொஞ்சம் ஒட்டவும் விடாமல் செய்கிறது. இடைவேளைக்குப் பின்தான் யதார்த்தம் அதிகமாக இருக்கிறது.
பேரன்பு – இப்போது பாராட்டப்படுகிறதோ இல்லையோ பிற்காலத்தில் பெரிதும் பாராட்டப்படும்.