தெலுங்கில் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தை தமிழில் இப்படி ரீமேக் செய்திருக்க வேண்டாம்.
படத்தில் சிம்புவைப் பற்றி, ஒன்று அவரே பேசிக் கொள்கிறார் அல்லது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு சிம்பு வேறு ஒரு ரூட்டில் பயணிப்பார் என்று எதிர்பார்த்தால் அவர் மீண்டும் பழைய பாதைக்குச் செல்வார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சுந்தர் .சி இயக்கும் படத்தில் என்னென்னமோ இருக்குமோ அது எல்லாம் இந்தப் படத்தில் அப்படியே தொடர்கிறது. எந்த இடத்திலும் எதையும் வித்தியாசமாகச் செய்து பார்க்கலாம் என அவர் முயற்சிக்கவில்லை.
வெளிநாட்டில் செட்டில் ஆன மிகப் பெரும் கோடீஸ்வரர் நாசர். அவருடைய மகள் ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்ததால் மகளை வீட்டை விட்டு விரட்டுகிறார். அது நடந்த 20 வருடங்களுக்குப் பிறகு மகளைப் பார்க்க வேண்டும் என்ற பாசம் வருகிறது. தாத்தாவின் ஆசை அவருடைய மகன் வயிற்றுப் பேரன் சிம்பு நிறைவேற்ற இந்தியாவுக்கு வருகிறார். அத்தை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் கார் டிரைவராக வேலைக்குச் சேர்ந்து அத்தை மனதை மாற்ற முயற்சிக்கிறார். அதில் அவர் வெற்றியடைந்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சுந்தர் .சி இயக்கத்தில் 23 வருடங்களுக்கு முன்பு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கூட படத்தின் நாயகன் கார்த்திக் பெரும் பணக்காரரின் வாரிசு, அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு, நாயகியின் வீட்டில் வந்து டிரைவர் வேலை செய்வார். இப்படி சுந்தர். சி இயக்கிய பல படங்களின் கொஞ்சக் கொஞ்சக் கதை, கதாபாத்திரங்கள்தான் காப்பியடிக்கப்பட்டு தெலுங்கில் ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ என வெளிவந்தது. அதையே மீண்டும் தமிழில்…ம்ம்ம்ம்…
சிம்புவுக்கு இது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பதில் பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. கிளைமாக்சில் மட்டும் அவரும் அழுது படம் பார்ப்பவர்களையும் பாசத்தால் கொஞ்சம் கண் கலங்க வைக்கிறார்.
படத்தின் நாயகி மேகா ஆகாஷ். ‘பேட்ட’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர். அவர் நாயகியாக நடிக்கும் முதல் படம் வெளிவருவதற்கு முன்பாகவே இந்தப் படம் வெளிவந்துவிட்டது. அடுத்த சில படங்களில் தமிழில் முக்கிய இடத்தைப் பிடித்துவிடுவார் என்பது மட்டும் தெரிகிறது.
கேத்தரின் தெரேசா, இன்னும் எத்தனை படங்களில்தான் இப்படி இரண்டாவது நாயகியாக நடிப்பார் எனத் தெரியவில்லை. ‘மெட்ராஸ்’ மாதிரி மீண்டும் பெயர் வாங்குவது எப்போது கேத்தரின்.
படத்தின் ஆரம்பத்திலிருந்தே இருக்கும் ரோபோ சங்கரை விட, இடைவேளைக்குப் பின் வரும் யோகி பாபு கலகலப்பாக சிரிக்க வைக்கிறார். சிம்புவின் நிஜ வாழ்க்கையைப் பற்றி அவர் அடிக்கும் கமெண்ட்டுகள்தான் படத்தின் காமெடி என்பது கதைக்குப் பொருத்தமில்லாதது, இருந்தாலும் புரிந்து கொள்ளும் ரசிகர்கள் சிரிக்கிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன் அந்த துள்ளல், மிரட்டல் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். பிரபு, நாசர், சுமன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் வழக்கம் போல்…
ஹிப்ஹாப் தமிழா எப்போது ஒரு பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் டியூனில் வித்தியாசம் காட்டுவார் எனக் கேட்க வேண்டும். இட்லி, ரசம் என்றெல்லாம் என்னென்னவோ வார்த்தைகள் வருகின்றன.
50 நாளில் படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. எல்லாவற்றிலும் ஒரு அவசரம் தெரிகிறது.
வந்தா ராஜாவாதான் வருவேன் – பெயரில்தான் ராஜா.