தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நடத்தும் இளையராஜா 75 நிகழ்ச்சி எந்தக் காரணங்களுக்காக பேசப்படுகிறதோ இல்லையோ, காலம் முழுவதும் இளையராஜா, ஏஆர் ரகுமான் இருவரும் சந்தித்து இசைத்துக் கொண்ட நிகழ்வுக்காக பேசப்படும்.
இளையராஜாவைப் பற்றி ரகுமான் பேச, ரகுமானைப் பற்றி இளையராஜா பேச என நேற்று முதல் நாள் நிகழ்வில் நடந்த அந்த சந்திப்பு நிகழ்ச்சியை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கான ரசிகர்களுக்கு அவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்முன் வந்து போகும்.
இளையராஜா இசையமைப்பில் 1986ல் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ படத்தில்தான் கம்ப்யூட்டர் இசை என்பது பேசப்பட்டது. அந்த இசையை கம்ப்யூட்டரில் பதிவு செய்தது நான்தான் என்று ரகுமான் சொன்னதும், அந்தப் படத்தின் தீம் மியுசிக்கை இசைத்துக் காண்பித்ததும் அவர்களது ரசிகர்களுக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்திருக்கும்.
நேற்றைய அந்த நிகழ்வு குறித்து இன்று மாலை ரகுமான் அவருடைய டிவிட்டரில் 33 வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் பின்னால் நின்று கொண்டு இசைக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்துடன், நேற்றைய புகைப்படத்தையும் பதிவிட்டு, ‘33 வருடங்களுக்குப் பிறகு மேஸ்ட்ரோ-வுடன், வாட் எ பீலிங்க’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இனி, இளையராஜா ரசிகர்கள் ரகுமான் ரசிகர்களிடம், ‘ரகுமானே, எங்க ராஜாவை மேஸ்ட்ரோ’ என்றுதான் சொல்வார்…போடா…’ என்று சொல்வதைப் பார்க்கலாம்.
33 years later with the Maestro, What a great feeling ! #EllamPugazhumIraivanukke pic.twitter.com/CUBATJqsnh
— A.R.Rahman (@arrahman) February 3, 2019