யு டியூப் வீடியோ தளத்தில் தென்னிந்திய மொழிப் படங்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது ‘மாரி 2’ படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல்.
யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷ் எழுதி, பாடகி தீ-யுடன் பாடிய இந்தப் பாடல் தாறுமாறான ஹிட்டாகி உள்ளது.
கடந்த மாதம் 2ம் தேதி யு டியூபில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் தொடர்ந்து புதுப் புது சாதனைகளைப் படைத்து வந்தது.
சில வாரங்களுக்கு முன்பு ‘ஃபிடா’ என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற ‘வச்சிந்தே…’ பாடல் தனுஷின் ‘கொல வெறி’ பாடல் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்தது. அந்த சாதனையை அந்தப் பாடலால் சில வாரங்களுக்கு மட்டுமே தக்க வைக்க முடிந்தது.
அந்த முதலிட சாதனையை மீண்டும் தனுஷ் படப் பாடலே முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘வச்சிந்தே….’ பாடல் 18 கோடியே 22 லட்சத்திற்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்று தற்போது இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
‘ரௌடி பேபி’ பாடல் 18 கோடியே 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று 20 கோடி பார்வைகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்புதான் ‘ரௌடி பேபி’ பாடல் ‘கொல வெறி’ பாடல் சாதனையை முறியடித்து தமிழ்ப் பாடல்களில் முதலிடத்தைப் பிடித்தது. இரண்டு நாட்களுக்குள்ளாகவே தென்னிந்திய மொழிப் படங்களில் முதலிட சாதனையைப் பிடித்து மீண்டும் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இன்னும் சில தினங்களுக்குள் 20 கோடி, அதாவது 200 மில்லியன் சாதனயைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.