டபுள் மீனிங் புரொடக்ஷன் சார்பாக அருண்மொழி மாணிக்கம் தயாரிக்க விஜய் இயக்கும் படம் ‘வாட்ச்மேன்’.
ஜி.வி. பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து, இசையமைக்கிறார். யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் கோல்டன் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்றும் நடித்துள்ளது.
இப்படத்தைப் பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் படத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
“இயக்குநர் விஜய்யின் ‘வாட்ச்மேன்’ திரைப்படம், த்ரில்லர் மற்றும் நகைச்சுவையின் கலவையாக இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்துப் பார்த்தேன். திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பாராத, ஆச்சரியமான திருப்பங்களும் நிறைந்திருந்தது.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக நாய்களின் நடவடிக்கைகள் வரும் காட்சிகளை விரும்பிப் பார்த்தேன். தொழில்நுட்பக் குழு சிறப்பாக பணிப்புரிந்துள்ளனர். எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் ரீ-ரெகார்டிங் அனைத்தும் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளது,” என்றார் பாண்டிராஜ்.
இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், “பாண்டிராஜ் சார் போன்ற திரைப்படத் தயாரிப்பாளரிடமிருந்து, இது போன்ற பாராட்டுகளைப் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வாட்ச்மேன்’ திரைப்படத்திற்கு கிடைத்த புகழாரம், திரைப்படத்திற்கு மற்றுமொரு வலிமை. இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் குடும்ப பார்வையாளர்களைத் தனது தொடர்ச்சியான படங்களின் மூலம் ஈர்த்தவர். அத்தகைய இயக்குநரிடமிருந்து பாராட்டுகளை பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது ‘வாட்ச்மேன்’ குழுவினராகிய ஜி. வி. பிரகாஷ், யோகிபாபு, மேலும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.,” என்றார்.
‘வாட்ச்மேன்’ படம் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக உள்ளது.