ஐரா – ஹாரர் படம் மட்டுமல்ல…

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, சர்ஜுன் கேஎம் இயக்க, கேஎஸ் சுந்தரமூர்த்தி இயக்கத்தில், நயன்தாரா, கலையரசன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஐரா’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் கலையரசன் பேசுகையில்,

“இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இந்தப் படம் இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி ‘மெட்ராஸ்’ மாதிரி ஏன் படங்கள் பண்ணுவதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்தப் படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும்.

சர்ஜூன் இயக்கத்தில் ‘எச்சரிக்கை’ படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்தப் படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாராதான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது ஐரா,” என்றார்.

இயக்குனர் சர்ஜுன் பேசுகையில்,

“நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி.

கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச் சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார்.

நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்,” என்றார்.

டிரைடன்ட் ஆரட்ஸ் ரவீந்திரன் இந்தப் படத்தை மார்ச் 28ம் தேதி வெளியிடுகிறார்.

Read Previous

எம்பிரான், காதலை சேர்க்கும் சக்தி எது ?

Read Next

‘வாட்ச்மேன்’ படத்திற்கு இயக்குனர் பாண்டிராஜ் பாராட்டு