சிம்பு கிடைத்தது வரம், பாராட்டும் தயாரிப்பாளர்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மஹா’.

இந்தப் படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பு பற்றி தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில்,

“நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க வேண்டும் என்பதால் மிகவும் பரபரப்பாக இருக்கிறது. இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

படப்பிடிப்பு மிகச் சிறப்பாக போய்க் கொண்டிருப்பது எனக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக இருக்கிறது. குறிப்பாக, சிம்பு உடனான தருணங்களே என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரைப் பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.

முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, “சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார்.

நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டுதான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களைப் போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம்.

நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தபோது, அவர் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, படப்பிடிப்புக்கு தயார் செய்யும் வரை இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். மேலும், அவராகவே வெளியே வந்து எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கேட்டு விட்டுப் போவார். ஒரு காட்சி முடிந்தவுடன் அது நன்றாக வந்திருக்கிறதா என ஒரு குழந்தையை போல ஆர்வமாக விசாரிப்பதை பார்க்கவே ஆச்சர்யமாக இருக்கும்.

எல்லா தயாரிப்பாளர்களுக்கும் என் தாழ்மையான வேண்டுகோள், படப்பிடிப்பில் அவருடன் இருந்து பாருங்கள். எல்லா நேரத்திலும் அவருடன் இருக்க வேண்டுமென உங்களிடம் அவர் கேட்கவில்லை. ஆனால் அவருடைய தேவைகளை புரிந்துகொள்ளுங்கள். அவர் உங்களுடையவர்.

தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக எல்லா இடங்களிலும் பயணம் செய்கிறார். ஹன்சிகா மோத்வானி முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது.

இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாகச் செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாகக் கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரைப் போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது,” என்றார்.

Read Previous

விஜய் டிவியில் ‘ஸ்டார்ட் மியூசிக்’ புதிய நிகழ்ச்சி

Read Next

தமிழில் நடிக்கக் காத்திருக்கும் ‘பிசாசு’ நடிகை