‘கைதி’, மிகப் பெரிய சந்தோஷம் – மரியம் ஜார்ஜ்

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியன்.

இந்த வருட தீபாவளியில் வெளிவந்த ‘கைதி, பிகில்’ இரண்டு படங்களிலும் நடித்து அவருக்கு மறக்க முடியாத தீபாவளியாக அமைந்துவிட்டது.

அதிலும், ‘கைதி’ படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கும், நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பிகில்’ படத்திலும் சர்ச் ஃபாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“பிகில்”, “கைதி” இரண்டு படங்களிலும் கலக்கியிருக்கிறார் . விஜய்யின் “பிகில்” படத்தில் சர்ச் ஃபாதராக கலக்கியிருகும் இவர் கார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும்
மாஸ் போலீஸாக கலக்கியுள்ளார்.

‘கைதி’ படம், நான் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றி. மக்கள் எல்லாம் கொண்டடுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.

லோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும் போதே இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லாப் படத்திலும் இப்படித்தான் சொல்லுவாங்க, எல்லாப் படம் போலத்தான் இந்தப் படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா, இப்ப பெரிய வெற்றிப் படமா அமைஞ்சிடுச்சு.

இந்த டீமே பிரமாதாமான டீம். நல்ல திரைக்கதை, கார்த்தி சார் மிரட்டிட்டாரு. நரேன் சார் நல்லா நடிச்சிருக்காங்க. சத்யனோட கேமரா இருட்டுல பிரமாதாமா வேலை பார்த்திருக்கு. எல்லோருமே கடுமையான உழைப்ப கொடுத்திருக்காங்க. இப்படி ஒரு வெற்றிப் படத்தில நானும் ஒரு அங்கமா இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன்.

இப்ப இணையம் முழுக்க பாராட்டுறாங்க, நெப்போலியன் கேரக்டர் பத்தி எல்லோரும் பேசுறாங்க, சொந்தக்காரங்க எல்லாரும் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க, ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இதுவரைக்கும் காமெடியாதான் நடிச்சிருக்கேன். சுந்தர் சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன், எல்லோரும் கொண்டாடுவாங்க, நம்மள பார்த்து சிரிப்பாங்க.

‘தடம்’ படத்தில தான் முதல் முறையா மகிழ் திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா, ‘கைதி’ல ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது.

என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க, இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க, சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசிச்சேன். ஆனா, லோகேஷ் சார் தான் தைரியம் தந்தார், பண்ணுங்க சார், மக்கள் ஏத்துப்பாங்கனு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால்தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம் தான்.

கார்த்தி சாருக்கும் எனக்கும் படத்தில் கடைசில தான் சீன் வரும். க்ளைமாக்ஸ் மட்டும் தான். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. அதுவரைக்கும் அவர் கதை தனியா நடக்கும்.

கார்த்தி சார் நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது. ஆனா அவரே தான் படம் முழுக்க ஓட்டியிருக்கார், பின்னிட்டார். என்னுடைய காட்சி முழுக்க கமிஷ்னர் ஆபிஸ் தான். நல்லா பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன். க்ளைமாக்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் வருவோம். கார்த்தி சார் அவரோட வேலையில சரியா இருப்பார்.

எல்லோருமே அருமையா வேலை பார்த்திருக்காங்க. கேமராமேன் சத்யன் செய்திருப்பது எல்லாம் பிரமிப்பான வேலை. இரவுல ஷுட் பண்ணுறது மிகப் பெரிய கஷ்டம். அதுவும் அவுட்டோர்ல, அவ்வளவு லைட்டா வைக்க முடியும் சொல்லுங்க. ஆனா படம் பார்க்கும் போது அற்புதமா ஒரு ஆங்கில படம் மாதிரி வந்திருக்கு. அதே மாதிரி ரீ ரிக்கார்டிங் சாம் சி எஸ் பின்னிட்டார். ஒரு பாட்டில எரிஞ்சா அது எங்க விழுது, எது மேல விழுதுங்கிற மாதிரி சவுண்ட் கரெக்டா வந்திருக்கு. மக்கள் எல்லாத்தையும் உன்னிப்பா பார்த்து பாராட்டுறாங்க

படம் பார்த்து கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டுனாரு அவருக்குப் பெரிய மனசு.

‘கைதி’ படம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார். அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள், படம் வந்த பிறகு கூட்டிப் போங்கள் என்றார்.

தீபாவளிக்கு படத்தைப் பார்க்க குடும்பத்தைக் கூட்டிப் போனேன். என் பையனும், மகளும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள், சொல்லவே இல்லையே என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள், அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இதை விட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப் பெரிய சந்தோஷம் இது தான்,” என்கிறார் மரியம் ஜார்ஜ்.

Read Previous

‘கபடதாரி’ படத்தில் பூஜா குமார்

Read Next

கபடதாரி – இன்று பூஜையுடன் ஆரம்பம்