சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் – அருண் வைத்யநாதன்

தமிழ்த் திரையுலகில் பன்முகக் கலைஞனாய், சினிமாவை நேசிப்பவர்கள் மத்தியில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் கமல்ஹாசன்.

பல புதிய தொழில்நுட்பங்களை இந்தியத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர். அவரை நேசித்து அவருடைய சினிமாவால் ஈர்க்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள் பல பேர்.

இப்போது சினிமா பிரபலங்கள் ஆனாலும், தங்களை கமல்ஹாசனின் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதில் அவர்கள் பெருமைப்படுபவர்கள். அப்படி ஒருவர்தான் இயக்குனர் அருண் வைத்யநாதன். நாளை கமல்ஹாசனின் பிறந்தாளை முன்னிட்டு அவருடைய முகப்புத்தகத்தில் கமல்ஹாசனைப் பற்றி அவர் பதிவிட்டிருப்பதாவது,

“சிவாஜியும், கமலும் ஓவர் ஆக்டிங் என்று பிதற்றுபவர்களைப் பார்த்தால் , அவர்கள் செய்யும் பரிகாசத்தைப் பார்த்து பரிகாசிக்கவே தோன்றுகிறது. தமிழர்கள், பெரும்பான்மையாய் உணர்ச்சிவசப்படுவதில் மன்னர்கள். 

நாம் சட்டென கொதிப்போம், சிரிப்போம், அழுவோம். அந்தந்த காலத்தில் அவரவர் நடிப்பு…சற்று மிகையே என்று சில இடங்களில் இப்போது தென்பட்டாலும், அன்றைய பொழுதில் அந்த நடிப்பு சிலாகிக்கப்பட்டதே!

திரிசூலம் தொலைபேசிக் காட்சியை பலர் கிண்டல் அடித்திருப்பதை இப்போது பார்க்கிறேன் – ஆனால், மாயவரம் பியர்லெஸ்ஸில் எழுந்த கரவொலியும், விசில் சத்தமும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. தெய்வமகனில் தந்தை சிவாஜி, கையை நீட்டி…தலையை உதறி, கால்களை டப் டப்பென்று தட்டுவார்…கோபத்தில்! ஏன், நவராத்திரியில் கடைசி காட்சிகளில் பேசாமலேயே கண்களால் நடிக்கத் தெரிந்த சிவாஜிக்கு, தெய்வமகனில் அடக்கி வாசிக்கத் தெரியாதா?

உதாரணத்திற்கு பார் மகளே பார் படத்தில் ஒரு காட்சியில் சிவாஜி அழ, படப்பிடிப்பு தளமே கண்கள் கலங்கி கரகோஷம் எழுப்ப, சோ மட்டும் சிரித்தபடி வெளியே சென்றாராம்.

சிவாஜி மேக்கப் அறைக்கு கூப்பிட்டு ‘என்னடா உனக்கு பிடிக்கலையா?’ என்று கேட்டாராம். சோ உடனே ‘ஆமாம்….எதுக்கு இப்படி அழணும்…கொஞ்சம் யதார்த்தத்தை மீறி இருக்கே!’ என்று கேட்க, சிவாஜி உடனே பத்து விதமாய் அந்தக் காட்சியை யதார்த்த பாணியில் நடித்துக் காட்டினாராம். கடைசியாக ‘என் மக்களுக்கு எத்தகைய நடிப்பு சென்றடையும்’ என்று தெரியும் என்று சொன்னாராம். சோவே சிலாகித்து எழுதிய விஷயம் இது!

இதே போன்று, கமல்ஹாசனுக்கும் என்னால் ஏன் ஏதற்கு எப்படி என்று எழுத முடியும்.

They are masters – They are legends. They know exactly what they are doing!

மகாநதியில் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால், கண்கள் கலங்க, கட்டை விரலை வாய்க்குள் பக்கவாட்டில் நுழைத்து ‘ஏன்’ என்று குரல் கமறக் கேட்கத் தெரிந்த நடிப்புத் தகப்பனுக்கு, நாயகன் தகப்பனாய் எண்பதுகளில் ஏன் ஓலமிட்டார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்திருக்கும். இல்லையென்றால் அந்தப் படம் இன்றளவும் அப்படி பேசப்பட்டுக்கொண்டிருக்குமா?

சச்சின் இரண்டு முறை பரிசோதனையில் ஏதேனும் ஒரு ஷாட் அடித்து அவுட் ஆகும் போது, இந்த சச்சினே இப்படித்தான் என்று சொல்வது போல் ….அவர் அதே போல பல முயற்சிகளில் எத்தனையோ பரிசோதனைகள் செய்து வெற்றி பெற்றதை மறந்து விடுவோம். அது போலத் தான், இந்த விவாதங்கள்.

சிவாஜியும், கமலும் ஏன் நடிப்பு ராட்சசர்கள் என்றால்….ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் விதம்.

சின்னதாய் ஒரு விஷயம் எடுத்துக் கொள்வோம்….

எல்லோரும் கொண்டாடுவோம் என்று பாவமன்னிப்பில் ஒரு பாட்டு வரும், அதில் ஆரம்பித்து ‘உன்னை ஒன்று கேட்பேன்’ பாடலில் பியானோ, சாக்ஸபோன் என்று ஒவ்வொரு வாத்தியமாய் வாசிப்பார்.

அதே போல் நம்மவர் படத்தில் கமல்ஹாசன் பியானோ வாசிப்பார், அபூர்வ ராகங்களில் மிருந்தங்கம் …பாருங்கள். அதில் ஒரு நேர்த்தியும் மெனக்கெடலும் இருக்கும் – அதற்குப் பெயர் தான் உழைப்பு. செய்யும் தொழிலுக்கு நேர்மையுடன் பணிபுரியும் ஒரு உழைப்பாளியின் நேர்த்தி.

சிவாஜி, கமல் மேல் எனக்கு விமர்சனங்கள் இல்லையா…இருக்கின்றது…. சிவாஜி தவறான கதையமைப்பில், இயக்கத்தில் சில படங்களில் எண்பதுகளின் கடைசியில் செய்ய ஆரம்பித்தார். அதே கதையமைப்பில் சிறந்து விளங்கிய கமல், வேறு எந்தக் கதையாசிரியரையும், திறமையையும் தற்போதெல்லாம் சேர்த்துக் கொள்ளத் தவறி விட்டார். அதனால் தான் ஒரு வேட்டையாடு விளையாடு பல போராட்டங்களுக்குப் பின்னர் வந்தாலும், மிகப் புதியதானதொரு பரிமாணத்தில் கமல் வெளிப்படுகிறார். முழு பாராட்டும் கௌதம் மேனனுக்கே!

தமிழ்த்திரையுலகில் சிவாஜி,கமல் இருவரும் கடைசியாக நடித்த தேவர்மகனில் ‘தந்தை-மகன்’ வாக்குவாதக் காட்சி – இன்றளவும் யதார்த்த நடிப்பின் உச்சக்கட்டம்.

தமிழ்த்திரையுலகில் எந்த நாற்காலியையும் யாருக்கு வேண்டுமானால் கொடுத்து அமரச் செய்யுங்கள். பரிசோதனை முயற்சி, கதாபாத்திரத்திற்காக தன்னை தயார் செய்து கொள்வது, வெற்றி தோல்விகளைக் குறித்து கவலைப்படாமல் முன்னேறிக்கொண்டே இருந்தது என்ற விஷயங்களை எடுத்துக் கொண்டால்…அந்த சிம்மாசனம் சிம்மக்குரலோனுக்கும், அதற்குப் பிறகு அவரது கலையுலகப் பிள்ளை கமல்ஹாசனுக்கும் தான்.

தேவர் மகன் – ஒரு திரைப்படம் மட்டுமல்ல. சிவாஜி அமர்ந்த நாற்காலியில், அதுவரை பவ்யமாய் மரியாதை காட்டும் கமல், மறைவுக்குப் பிறகு அமருவார்.

கதையைக் கேட்டவுடன் ‘நீ ஏண்டா என் நாற்காலிக்கு ஆசைப்படறே’ என்று சிவாஜி கேட்க, ‘எனக்கு அது தான் வேணும்…அது மட்டும் போதும்!’ என்று கமல் பதில் சொன்னாராம்.

ஏனெனில், கமலுக்குத் தெரியும்…அது நாற்காலி அல்ல, சிம்மாசனம்!

They are masters – They are legends. They know exactly what they are doing!

 

Read Previous

‘மாநாடு’ படத்தில் மீண்டும் சிம்பு

Read Next

அனுஷ்கா நடிக்கும் நிசப்தம் – டீசர்