டிரோன்ஸ் – விமர்சனம்

அழகி, சூனியக்காரி, பறக்கும் தட்டு என கற்பனைக் கதைகளில் நாம் கடந்து வந்த அம்சங்களுடன் அறிவியல் பின்னணியையும், நகைச்சுவையையும் இணைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டிரோன்ஸ்’.

கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் ஆகியோர், பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே தங்குவதற்காக அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் தஞ்சம் அடைகிறார்கள். ஆனால், அங்கிருந்து வெளியேற முடியாத சூழலில் சிக்கிக்கொள்ளும் அவர்கள், டிரோன் மூலம் வெளி உலகத்தைப் பார்க்கும்போது சித்தி இத்னானியைப் பார்க்கிறார்கள். அவருடைய அழகில் மயங்கும் டிராவிட் செல்வம் காதல் வயப்பட, சூனியக்காரியான அவரது பாட்டி தேவதர்ஷினி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களைச் சிறை பிடிக்கிறார். இதற்கிடையே காணாமல் போன மாணவர்களைத் தேடி வரும் காவல்துறை அதிகாரி சினிமாவாலா சதீஷும் அந்தப் பெண்ணின் அழகில் மயங்குகிறார். இப்படி பலரையும் ஈர்க்கும் அந்தப் பெண்ணின் அழகுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, அதற்குப் பின்னணியில் இருக்கும் சோகம் என்ன, அதில் சிக்கிக்கொண்டவர்களின் நிலை என்ன என்பதற்கான விடைகளை நகைச்சுவையுடன் சொல்கிறது ‘டிரோன்ஸ்’.

அழகி, சூனியக்காரி என்ற பழக்கமான கற்பனைக் கதைகளுக்கு அறிவியல் பின்னணியில் புதிய வடிவம் கொடுத்திருக்கும் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத், அதனுடன் நிறப் பாகுபாடு தொடர்பான சமூகச் சிந்தனையையும் இணைத்திருப்பது படத்தின் சிறப்பு. நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அழகை மட்டுமே வைத்து ஒருவரை மதிப்பிடும் மனப்பான்மையையும் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, அழகில் தேவதையாகவும், நடிப்பில் மிரட்டும் வகையிலும் கவனம் ஈர்க்கிறார். அவரை மையப்படுத்தி நகரும் கதையில், அவரது தோற்றமும் கதாபாத்திரத்தின் மர்மமும் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், தனது நடிப்பால் தனி முத்திரை பதிக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் அவர், நிறத்தை வைத்து ஒருவரின் தகுதியைத் தீர்மானிப்பவர்களுக்குத் தனது நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், நகைச்சுவைக்கு ஏற்ற உடல்மொழி மற்றும் நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். சூனியக்காரியாக வரும் தேவதர்ஷினி, தனது அனுபவம் வாய்ந்த நடிப்பால் வித்தியாசமான கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் சினிமாவாலா சதீஷ், அளவான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குரேஷியின் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. ஆர்.ஜே.தீபக், சசி செல்வராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நடந்தாலும், கதையின் சூழலுக்கு ஏற்ற வகையில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர். இசையில் பாடல்கள் ஓரளவுக்குத் திருப்தி அளிக்கின்றன. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கும் நகைச்சுவைக்கும் துணை நிற்கிறது. படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரது பங்களிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

அழகி மற்றும் சூனியக்காரக் கிழவி கதைகளுக்கு அறிவியல் கற்பனையையும் நகைச்சுவையையும் கலந்து புதிய திரை அனுபவமாகக் கொடுக்க முயன்றிருக்கும் இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத், பொழுதுபோக்குடன் சமூகச் சிந்தனையையும் பேச முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. முதல் பாதியில் கதை நகரும் விதம் சற்று சோர்வை ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும் நகைச்சுவைக் காட்சிகளும் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. நிறப் பாகுபாடு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் ஆழமாக அலசப்படாமல் மேலோட்டமாகக் கடந்து சென்றாலும், அவற்றை நகைச்சுவையின் வழியாகச் சொல்லியிருப்பது கவனம் பெறுகிறது.

கற்பனைக் கதைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் ‘டிரோன்ஸ்’, குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதைச் சொல்வதே ‘டிரோன்ஸ்’.

Read Previous

அதிரடியான வரவேற்பில் ‘ஜெயிலர் 2’