ஜெயிலர் 2 – விமர்சனம்

2023ல் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சிக் கதையாக இந்த ‘ஜெயிலர் 2’ வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த்தின் எவர்க்ரீன் மாஸ் படமான ‘பாட்ஷா’ படத்திற்குப் பிறகு அவரது ஹீரோயிசத்தை முழுமையாக வெளிப்படுத்திய படமாக ‘ஜெயிலர்’ படம் இருந்தது என ரசிகர்கள் சொன்னார்கள். அந்த முதல்பாகத்தை விட இந்த ‘ஜெயிலர் 2’ இன்னும் அதிகமான ஹீரோயிசமாக இருக்கிறது என இனி சொல்வார்கள். அந்த அளவிற்கு இயக்குனர் நெல்சன், ரஜினிகாந்த்தை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவரது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறார்.

முதல் பாகத்தில் சிலைகளைக் கடத்தும் தொழில் செய்த வர்மன்–ஐக் கொலை செய்கிறார் ரிட்டயர்ட் ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன். அதோடு அந்த சிலை கடத்தலுக்குத் துணையாக இருந்த தனது மகனையும் கொல்கிறார்.

வர்மன்–ஐக் கொலை செய்தது யார் என வர்மனின் நண்பனான திலீப் ஒரு பக்கம் ஆட்களை விட்டுத் தேட, திலீப்பின் முதலாளியான கோவாவில் உள்ள கல்பக் குடும்பத்தைச் சேர்ந்த போதி கல்பக், வர்மனைக் கொன்றவர்களை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிறார். வேறு ஒரு ஊரில் தனது மனைவி, மருமகள், பேரனுடன் இருக்கும் முத்துவேல் பாண்டியன், வர்மன் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறார். யார், யாரைக் கண்டுபிடித்தது, அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை.

ஒரு சூப்பர்மார்க்கெட்டில் சூபர்வைசராக வேலை, பின்னர் உள்ளூர் அரசியல்வாதியிடம் டிரைலவர் வேலை என அப்பாவியாக சுற்றி வருகிறார் ரஜினிகாந்த். அடுத்து ஏதோ செய்யப் போகிறார் என நாம் எதிர்பார்க்க, அப்படி ஒரு அதிரடியாக ஆரம்பமாகிறது அவரது ஹீரோயிசம். அரசியல்வாதி நமோ நாராயணன் பெயரைச் சொல்லி தமிழ் கும்பலை ஓடவிடுவதும், அடுத்து டீக்கடை கொலைகள் என எதிர்பார்க்காத ஆக்ஷன்களில் பரபரவென ஓடிவிடுகிறது இடைவேளை. அடுத்து ரஜினிக்கும் கல்பக் குடும்பத்தைச் சேர்ந்த அப்பா மிதுன் சக்கரவர்த்தி, மகள் வித்யா பாலன், மகன் எஸ்ஜே சூர்யா ஆகியோரை ரஜினிகாந்த் எதிர்த்து செய்யும் காட்சிகள் ஒவ்வொன்று தெறிக்கவிடும் மாஸ் காட்சிகள். மூன்று வருட இடைவெளி விடாமல் மூன்றாம் பாகத்தையும் சீக்கிரமே எடுத்த முடித்து ரிலீஸ் செய்யுங்கள் என ரசிகர்களை சொல்ல வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

படத்தின் இடைவேளை வரையிலான வில்லன் திலீப் ஆக சுராஜ் வெஞ்சாரமூடு அதிரடி காட்டியுள்ளார். தோற்றத்தில் முதல் பாகத்தின் வினாயகன் கதாபாத்திர சாயல் கொஞ்சம் இருந்தாலும் அது வேறு ரகம், இது வேறு ரகம் என தனது நடிப்பால் சொல்ல வைத்திருக்கிறார். இடைவேளை சமயத்தில் சரியான என்ட்ரி கொடுக்கிறார் எஸ்ஜே சூர்யா. அவரது வழக்கமான நடிப்பை நிறையவே அடக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன். வேறு ஒரு ஸ்டைலில் சூர்யாவும் அசத்தியுள்ளார்.

இவர்களுக்கு அடுத்து வில்லத்தனத்தில் மாஸ் காட்டுபவர் வித்யா பாலன். அவருக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகளில் ‘படையப்பா’ ஞாபகம் வந்து போகிறது. மூன்றாவது பாகத்தில் இவர்கள்தான் பரபரப்பை ஏற்படுத்தப் போகிறார்களோ ?.

இடைவேளை வரையில் படம் மிகவும் கலகலப்பாக நகர்வதற்கு இருவர் முக்கியக் காரணம். ஒருவர் யோகி பாபு, மற்றொருவர் நமோ நாராயணன். யோகி பாபு கதாபாத்திரம் இந்த பாகத்திலும் அசத்தல். ரஜினியைப் பற்றி அவரைப் பேச வைத்தே ரசிக்க வைத்துவிட்டார். நமோ நாராயணன் தேர்வு மிகச் சிறப்பு. அவரும் கதாபாத்திரத்தை சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்.

மிதுன் சக்கரவர்த்தி அப்பா வில்லன் கதாபாத்திரம் என்றாலும் ஒரு கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் இந்த இரண்டாம் பாகத்தில் ஹிந்தி நடிகர் ஹிருத்தி ரோஷனின் கதாபாத்திரம் செம மாஸ். முதல் பாகம் போலவே சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் கொஞ்சமாக வந்தாலும் கிளைமாக்ஸ் முன்பாக தியேட்டரை ஆர்ப்பரிக்க வைத்துவிட்டார்கள்.

ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, மாஸ்டர் ரித்விக், பகவதி பெருமாள் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

அனிருத்தின் பின்னணி இசை வழக்கம் போல படத்தை மற்றொரு தளத்திற்குக் கொண்டு போய் வைத்துவிட்டது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு, நிர்மல் படத்தொகுப்பு, கிரண் கலை இயக்கம், சேத்தன் டிசோசா சண்டைப் பயிற்சி படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கிறது.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மாஸ் என்டர்டெயின்மென்ட் படத்தைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கும் நிறைவைத் தரும் ஒரு படமாக இருக்கும் இந்த ‘ஜெயிலர் 2’. ரஜினிகாந்தை எந்த அளவிற்கு ரசித்திருந்தால் இப்படி ஒரு வசனம், காட்சிகள், உடல்மொழி என வைத்து அசத்தியிருப்பார் இயக்குனர் நெல்சன்.

Read Previous

தியாகராஜா டாக்கீஸ் – முதல் தயாரிப்பு ஆரம்பம்

Read Next

அதிரடியான வரவேற்பில் ‘ஜெயிலர் 2’