ஆல் பாஸ் – விமர்சனம்

வட சென்னையின் வாழ்வியலையும், அப்பகுதி மக்களின் ஒற்றுமை, குடும்ப உறவுகள் மற்றும் பணத்தால் ஏற்படும் மாற்றங்களையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. மைதீன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அரசியல்வாதி ஒருவர் பதுக்கி வைத்திருக்கும் பல கோடி ரூபாய் பணம், எளிய மக்களின் கைகளுக்குக் கிடைத்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் சொல்லியிருக்கும் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்ததா, பார்ப்போம்.

வட சென்னையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் சொந்த சகோதரர்களைப் போல ஒற்றுமையாக வாழ்கிறார்கள். இவர்களது குடும்பங்களும் ஒன்றாகப் பழகுவதோடு, குழந்தைகளும் ஜெயபிரகாஷை பெரியப்பாவாக மதித்து அவர் சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள்.

இந்த நிலையில், அப்பகுதி எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா பதுக்கி வைத்திருக்கும் ரூ.5 கோடி பணத்தை மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் கைப்பற்றி வீட்டுக்குக் கொண்டு வந்துவிடுகிறார்கள். இதை அறியும் ஜெயபிரகாஷ், பணத்தை எடுத்த இடத்திலேயே திருப்பி வைக்கும்படி அறிவுறுத்துகிறார். ஆனால், பணத்தின் மீதான ஆசை மற்ற குடும்பத்தினரின் முடிவை மாற்றிவிடுகிறது. அந்தப் பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்யலாம் என்று அனைவரும் திட்டமிட, மறுபுறம் பணத்தை இழந்த எம்.எல்.ஏ அதை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்.

கையில் பல கோடி ரூபாய் இருந்தும் அதைச் செலவு செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர், அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பணத்தை மீட்க அரசியல்வாதி கையாளும் உத்திகள் என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் கதையை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. இறுதியில் அந்தப் பணம் யாரிடம் செல்கிறது, குடும்பத்தினர் தங்களது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார்களா என்பதே மீதிக்கதை.

வட சென்னை மக்களின் இயல்பான வாழ்க்கையையும், அவர்களுக்கிடையிலான நெருக்கத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மைதீன், ஒரு சிறிய சம்பவத்தை மையமாக வைத்து சுவாரஸ்யமான திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார். பணத்தின் மீதான ஆசை மனிதர்களின் முடிவுகளை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதையும், குடும்பத்தினரிடையே பிளவை ஏற்படுத்துகிறது என்பதையும் திரைக்கதையில் இயல்பாகக் கையாண்டிருக்கிறார்.

கையில் பணம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாமல் தவிக்கும் சூழலையும், பணத்தை மீட்பதற்காக எம்.எல்.ஏ மேற்கொள்ளும் முயற்சிகளையும் சுவாரஸ்யமாக இணைத்திருப்பது படத்தின் பலம். பணத்தை எடுத்தவர்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிக்கல்களையும், அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

அதே சமயம், முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றுக் குறைகிறது. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதிலும் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. இருப்பினும், மையக்கருவை நேர்மையாகக் கையாண்டு, குடும்ப உறவுகளையும் பணத்தாசையின் விளைவுகளையும் பேசும் படமாகக் கொடுத்ததில் இயக்குநர் கவனம் பெறுகிறார்.

ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகிய மூவரும் வட சென்னை மக்களின் வாழ்வியலுக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, குடும்பத்தினரை ஒற்றுமையாக வழிநடத்த முயற்சிக்கும் ஜெயபிரகாஷின் கதாபாத்திரம் கதைக்கு முக்கியமான அடித்தளமாக அமைகிறது.

அவர்களது மனைவிகளாக நடித்திருக்கும் செந்திகுமாரி, வினோதினி, மோகனா.ஆர் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஜனனி இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகள் படத்தின் வணிக அம்சத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றன.

மூன்று குடும்பங்களின் பிள்ளைகளாக நடித்திருக்கும் சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோர் தங்களது வயதுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். எம்.எல்.ஏவாக வரும் சரத் லோகித்ஷவா, கவுன்சிலராக நடித்திருக்கும் சத்யா, காவல் ஆய்வாளராக வரும் அருவி மதன் உள்ளிட்டோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தில்ராஜு, வட சென்னைப் பகுதியையும் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையையும் செயற்கைத்தனம் இல்லாமல் இயல்பாகப் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளையும் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளன. குறிப்பாக, காதல் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை திரைக்கதையின் பரபரப்பைக் கூட்டுவதோடு, முக்கியமான காட்சிகளின் தாக்கத்தையும் அதிகரிக்கிறது.

படத்தொகுப்பாளர் எஸ்.பாஸ்கர், படத்தைச் சீராக நகர்த்த முயற்சித்திருக்கிறார். இருப்பினும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் ஏற்படும் தொய்வைத் தவிர்த்திருந்தால் திரைக்கதையின் வேகம் மேலும் அதிகரித்திருக்கும்.

பணம் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடுமா? கையில் இருக்கும் பணத்தைவிட குடும்பத்தினரின் ஒற்றுமையும் நிம்மதியும்தான் முக்கியம் என்பதை உணர்த்த முயற்சித்திருக்கிறது ‘ஆல் பாஸ்’. வட சென்னை மக்களின் வாழ்வியல், இயல்பான நடிப்பு, சுவாரஸ்யமான மையக்கரு ஆகியவை படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். சிறு குறைகள் இருந்தாலும், பணத்தாசைக்கும் குடும்ப உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை திரில்லர் அம்சங்களுடன் சொல்லியிருக்கும் ‘ஆல் பாஸ்’ ஒரு முறை பார்க்கக்கூடிய குடும்பத் திரைப்படம்.

Read Previous

E 1 விமர்சனம்

Read Next

தாய்நிலம் – விமர்சனம்