இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசைஞானி இளையராஜா, இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டோரதி’ படம், அறிவிப்பு வெளியான நாளிலேயே பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருக்கின்றன. ‘கல்யாண விருந்து…’ மற்றும் ‘முத்துமணி..’ ஆகியவை சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், குடும்ப நிகழ்ச்சிகளிலும் ஒலிக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தச் சூழலில், தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயலாத புதிய அணுகுமுறையாக, படம் வெளியாவதற்கு முன்பே பின்னணி இசைத் தொகுப்பை வெளியிட கார்த்திக் சுப்புராஜ்–இளையராஜா கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்காக செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் (OST) வெளியிடப்படுகிறது.
இது குறித்தும் படம் குறித்தும் பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,
“டோரதி’ என் பத்தாவது படம் என்றாலும், ‘பீட்சா’ காலத்தில் பத்திரிகையாளர்கள் முன் அமர்ந்த அதே உணர்வுடன் இப்போதும் இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகவும் தனிப்பட்டது. இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தேன். கதையை எழுதி முடித்த பிறகு, எழுத்தாளர் சரவணன் சந்திரனிடம் கொடுத்து கூடுதலாக எழுதச் சொன்னேன். பின்னர் நானே ஆறு முதல் ஏழு வடிவங்களில் திரைக்கதை எழுதினேன். இதில் புதிய முகங்களையே கதாநாயகர்களாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.
மதுரையை மையமாகக் கொண்ட இந்தக் கதை, நான் அங்கு வாழ்ந்த அனுபவங்களையும், நான் பார்த்த மனிதர்களையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை. சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இரண்டு இளைஞர்கள், அவர்கள் வாழ்வில் நுழையும் ஒரு பெண், அதன்பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது என்ற வகையில் கதை அமையும். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.
இந்தப் படத்தை முன்பே எடுக்க வேண்டியிருந்தது. கதை முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் தருணத்தில் ‘மகான்’ எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தள்ளிப்போட்டேன். அதற்குப் பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, அதைத் தொடர்ந்து சூர்யா சாரைச் சந்தித்து ‘ரெட்ரோ’ தொடங்க வேண்டியிருந்தது. இப்படியே இந்தப் படம் தள்ளிக்கொண்டே போன நிலையில், இப்போது செய்யவில்லை என்றால் ஒருபோதும் செய்ய முடியாது என்று தெரிந்தது. அதனால்தான் உடனே படத்தைத் தொடங்கிவிட்டேன்.
இந்தப் படத்தை சர்வதேச ரசிகர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்று முன்பே தீர்மானித்தேன். அதனால்தான் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம். அங்கு உலகப் பிரீமியர் திரையிடலுக்கு படம் தேர்வாகியுள்ளது. விழாவில் பங்கேற்பதால் இது விழாவுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். நம்ம மக்களுக்கு ஏற்ற, திரையரங்கக் கொண்டாட்டங்கள் மற்றும் பாடல்கள் நிறைந்த படமாகவே இருக்கும். அதே நேரத்தில் நம் கலாச்சாரத்தையும் வாழ்வியலையும் உலகளவில் கொண்டு செல்லும் படமாகவும் அமையும். அதற்காகவே சர்வதேச விழாவில் திரையிட முடிவு செய்தோம். செப்டம்பர் 11ஆம் தேதி டொராண்டோவில் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் புதிய முகங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களையே நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றுக்கு சனத் நடிப்பது, நான் கதை எழுதி முடித்த உடனேயே தீர்மானமாகிவிட்டது. அதற்காக அவரைத் தயாராக இருக்கச் சொன்னேன்; அவரும் தயாராக இருந்தார். மற்றொரு கதாபாத்திரத்துக்கு நடிகர் உறுதியாகவில்லை. அதனால் புதுமுகத்தைத் தேர்வு செய்ய ஆடிசன் நடத்தினோம். அப்போது ரிஷிகாந்த் வந்தார். அவரது ஆடிசனைப் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள். அப்படித்தான் அவர் தேர்வானார். இப்போது இருவரின் நடிப்பையும் பார்த்தால், இந்தக் கதாபாத்திரங்களுக்கு இவர்களைத் தவிர வேறு யாரும் பொருந்தமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி பெரிய வெற்றியடைந்திருக்கின்றன. இது ராஜா சாரின் மேஜிக். இந்தக் கதைக்கு அவர்தான் இசை அமைய வேண்டும் என்று நான் முன்பே நினைத்திருந்தேன். ஆனால் அவரிடம் கேட்கத் தயக்கமாக இருந்தது. என் முந்தைய படங்களுக்கும் அவரோடு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்தத் தயக்கத்தாலேயே அவரைச் சந்திக்கவில்லை. இந்தக் கதையைத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும்போதே இசை ராஜா சார்தான் என்று எழுதி அனுப்புவேன். இருந்தாலும், படப்பிடிப்பை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் இசையமைப்பாளர் குறித்து யோசிக்காமல் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டேன். படத்தை முடித்துப் பார்த்த பிறகு, இதை ராஜா சாரிடம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவரைச் சந்தித்து படத்தைக் காட்டினேன். அவர் பார்த்த உடனேயே மறுநாளே பணியைத் தொடங்கலாம் என்றார். அப்படித்தான் ராஜா சாருடன் என் பயணம் தொடங்கியது. அவரோடு இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியம். கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்க முடியாது. ‘பேஷன்’ என்ற சொல்லுக்குச் சரியான எடுத்துக்காட்டு அவர்தான்,” என்றார்.

படம் குறித்து ரிஷிகாந்த் பேசுகையில்,
“கார்த்திக் சுப்புராஜ் அண்ணன் படத்தில் நடிப்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அனுபவமாக இருக்கிறது. அதிலும் ராஜா சார் இசையில், அவரது பாடலுக்கு நடித்தது என்ன நடக்கிறது என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கிறது,” என்றார்.
நடிகர் சனந்த் கூறுகையில்,
“எனக்கும், ரிஷிகாந்துக்கும், கார்த்திக் அண்ணனுக்கும் இந்தப் படம் மிக முக்கியமானது. எனவே படம் வெளியான பிறகுதான் இதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்றார்.
ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு குறித்து மேலும் பேசிய கார்த்திக் சுப்புராஜ்,
“இளையராஜா சார் படத்தைப் பார்த்து முடித்த உடனேயே, இந்தப் படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிடலாம் என்றார். பாடல்களை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளுங்கள்; ஆனால் சவுண்ட் ட்ராக்கை நேரடியாக வெளியிடலாம் என்றார். அப்படியானால் வினைலையும் வெளியிடலாமா என்று நான் கேட்டேன். அப்படித்தான் இந்த யோசனை உருவானது.
மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிக்கும் நிகழ்வாக இது அமையும். சிம்பொனி போல படத்தின் பின்னணி இசையை ராஜா சார் நேரடியாக இசைக்க இருக்கிறார். இதை ஒரு பட நிகழ்ச்சியாகப் பார்க்காமல், ராஜா சாரின் இசையை அனுபவித்து அதில் பயணிக்கும் ரசிகர்களாக அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்றார்.
டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் படம் பங்கேற்பது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
“கதை எழுதி முடித்த உடனேயே சர்வதேச விழாவில் திரையிட வேண்டும் என்று முடிவு செய்தேன். பிக் 5 எனச் சொல்லப்படும் உலகின் மிக முக்கியமான ஐந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்றில் நம் படம் திரையிட வேண்டும் என்று நினைத்தேன். இது எனக்கு முதல் அனுபவம். என் படங்கள் வெளியீட்டுக்கு முன்பு சர்வதேச விழாக்களில் திரையிட்டதில்லை. ஆனால் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இதில் நிறைய அனுபவம் உண்டு; அவர்கள் ஆஸ்கார் விருதும் பெற்றிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் டொராண்டோ விழா குழுவினருக்குப் படத்தை அனுப்பினோம். அவர்கள் படத்தைப் பார்த்ததும் உலகப் பிரீமியரில் திரையிடத் தேர்வு செய்துவிட்டார்கள்.”
ஷிக்யா எண்டர்டெயின்மெண்ட், தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் குனித் மோங்கா கபூர், அச்சின் ஜெயின், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் எழுதியுள்ளனர். திரைக்கதையை எழுதி இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஒளிப்பதிவு திரு, படத்தொகுப்பு கணேஷ் சிவா.
வரும் செப்டம்பர் 11ஆம் தேதி டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகப் பிரீமியராகத் திரையிடப்படும் ‘டோரதி’, செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.