ஹாய் – விமர்சனம்

பெரிய திருப்பங்களோ கடும் மோதல்களோ இல்லாமல், இதமான காதலையும் குடும்ப உணர்வையும் வைத்து ஒரு படம் இன்று எவ்வளவு தூரம் ரசிக்க வைக்கும் என்பதற்கான முயற்சியாகவே ஹாய் வந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன், கவின்-நயன்தாரா இணையை முன்வைத்து சொல்லும் இந்தக் கதை, புதியதாக இல்லாவிட்டாலும் இயல்பான நகைச்சுவையாலும் அமைதியான உணர்வாலும் பார்வையாளரை அருகில் இழுக்கிறது.

தனது பெற்றோரைப் போல காதல் திருமணமே செய்ய வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கைகூடாததால், பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்குகிறார்கள். காதலித்தே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், கடிதம் மூலம் குடும்பத்தை மிரட்டிவிட்டு வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.

அம்மாவின் முகத்தைக் காணாமல், அப்பாவின் அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரும் நாயகி நயன்தாரா, திருமணப் பந்தத்தில் சிக்காமல் வாழ்க்கையில் சாதிக்க விரும்புகிறார். ஆனால் திடீரென அவருக்குத் திருமண ஏற்பாடு நடக்க, அதில் விருப்பமில்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

வீட்டை விட்டு ஓடிவந்த நயன்தாராவும் கவினும் சென்னையில் சந்திக்கிறார்கள். நட்பாகப் பழகுகிறார்கள். தான் எதிர்பார்க்கும் காதலி நயன்தாராதான் என்று நினைத்து கவின் அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் காதல், கல்யாணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை அவர் வெளிப்படுத்த, கவின் தன் காதலைச் சொல்லாமல் மறைத்துவிடுகிறார்.

இதற்கிடையே இருவரும் கணவன்-மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழல் உருவாகிறது. அந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி, நயன்தாராவைத் தன் காதல் வலையில் வீழ்த்த முயலும் கவின் வெற்றி பெற்றாரா என்பதை, திகிலில்லாத இதமான காதல் உணர்வோடு சொல்வதே ஹாய்.

கொங்குத் தமிழ் பேசும் கோவை இளைஞராக நடிக்கும் கவின், காதல் மீதான ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் நடிப்பில் நன்றாகக் காட்டியிருக்கிறார். நயன்தாராவுடனான வயது வித்தியாசத்தை முதிர்ச்சியான நடிப்பால் மறைத்திருக்கும் அவர், பல காட்சிகளை இயல்பாகக் கையாண்டு ரசிக்க வைக்கிறார். காமெடி கலந்த நடிப்பின் மூலம் இடையிடையே சிரிக்கவும் வைக்கிறார்.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண்ணாக வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும் வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தும் நயன்தாரா கூடுதலாகப் பளிச்சென்று இருக்கிறார். கிராமத்துப் பெண் என்றாலும் மாடர்ன் உடைகளால் அந்த அடையாளம் தெரியாதபடி அவர் பயணிக்கிறார். திரை இருப்பும் முதிர்ச்சியான நடிப்பும் படத்துக்குப் பலம் சேர்த்தாலும், வயது முதிர்ச்சி சில காட்சிகளுடன் ஒட்டாமல் தணித்துச் செல்கிறது.

கவினின் அம்மாவாக ராதிகா, அப்பாவாக கே. பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக பிரபு, சிறப்புத் தோற்றத்தில் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரின் அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு உறுதுணையாக இருக்கிறது.

சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரின் காட்சிகள் குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. குறிப்பாக சத்யனின் சாதாரண மைண்ட் வாய்ஸ் கூட திரையரங்கே அதிரும்படி சிரிக்க வைக்கிறது.

விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் திரை இருப்பு சிறியதாக இருந்தாலும், கதை ஓட்டத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா படத்தை கலர்புல்லாகக் காட்டியிருப்பதோடு, நயன்தாராவைப் பளிச்சென்று காட்டியிருக்கிறார்.

ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட ரகமாக இருக்கின்றன. பின்னணி இசை காதல் உணர்வைக் கடத்தும் விதத்தில் பயணிக்கிறது.

இலகுவான கதையை, பார்வையாளர் உள்ளத்தைத் தொடும் இதமான உணர்வுகளாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், எளிய காதல் கதையை எளிய திரைக்கதையோடு சொன்னாலும், அமைதியான இதமான உணர்வைத் தரும் படமாகவே கொடுத்திருக்கிறார்.

தொடக்கம் முதல் முடிவு வரை பெரிய திருப்பங்களோ எதிர்பார்ப்போ இல்லாமல் படம் சென்றாலும், கதாபாத்திரங்கள் மற்றும் காட்சி வடிவமைப்பின் மூலம் பார்வையாளரைச் சிரிக்க வைத்து மகிழ்விக்கும் வித்தையை இயக்குநர் நன்றாகச் செய்திருக்கிறார்.

சிறு சிறு குறைகள் தெரிந்தாலும், கவின், நயன்தாரா இருவரது முதிர்ச்சியான, அளவான, இயல்பான நடிப்பு அந்தக் குறையை மறக்கடித்து, படத்தைப் பார்வையாளர் கவரும்படி செய்துவிடுகிறது.

Read Previous

டாக்ஸிக் – விமர்சனம்

Read Next

மண்டாடி – இசை வெளியீட்டு விழா