கே.ஜி.எஃப். வெற்றிக்குப் பிறகு யாஷ் மீண்டும் ஒரு பிரமாண்டக் கேங்ஸ்டர் கதையுடன் திரைக்கு வந்திருப்பதே டாக்ஸிக் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியது. ஆனால் பிரமாண்டமும் வன்முறையும் மட்டும் ஒரு படத்தைத் தாங்க முடியாது என்பதை இந்தப் படம் மீண்டும் நினைவூட்டுகிறது. ஸ்டைலும் ரத்தமும் நிறைந்திருந்தாலும், கதைச் சுவாரஸ்யம் இல்லாமல் சலிப்பூட்டும் ஒரு அனுபவமாகவே டாக்ஸிக் அமைந்திருக்கிறது.
1920 முதல் 1947 வழியாக 1970 வரையிலான காலக்கட்டத்தில் கதை நகர்கிறது. அப்போதைய கோவாவைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலுடன் படம் தொடங்குகிறது. துடிப்பும் முரட்டுத்தனமும் மிக்க இளைஞரான நாயகன் யாஷும், அவரது சகோதரி நயன்தாராவும் இணைந்து எதிரிகளை வேட்டையாடுகிறார்கள். தம்பி முழு நகரத்தையும் ஆள வேண்டும் என்பதே அக்காவின் ஆசை. அதற்காக அவருக்குத் துணையாக நிற்கும் அவர், திடீரென சிலரின் சதியால் கொல்லப்படுகிறார். அக்காவின் மரணத்துக்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறார்.
இதற்கிடையே அவர் மீண்டும் கோவா திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவருடைய வருகையை அறிந்ததும் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துகொள்கிறார். அவர்களது பத்து வயது மகனை யாஷ் கொல்ல முயல்கிறார். ஆனால் அது அவராலேயே முடியாமல் போக, அவரை அங்கிருந்து விரட்டுகிறார்.
பின்னர் வழக்கம் போல கோவாவில் தனது சாம்ராஜ்யத்தை நடத்தும் யாஷ், ருக்மணி வசந்தைத் திருமணம் செய்து குழந்தை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அவரது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சாம்ராஜ்யத்துக்கும் மகனுக்கும் ஆபத்து நெருங்குகிறது. அந்த ஆபத்திலிருந்து மகனையும் ஆதிக்கத்தையும் யாஷ் காப்பாற்றினாரா, அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை பிரமாண்டமாகச் சொல்வதே டாக்ஸிக்.
கே.ஜி.எஃப்.-இன் பெரும் வெற்றியால் எழுந்த எதிர்பார்ப்பை, பிரமாண்டமும் வன்முறைக் காட்சிகளும் மட்டுமே நிறைவு செய்யும் என்ற தவறான கணக்கீட்டால் படம் தள்ளாடியிருக்கிறது.
வலுவான கதையும், நம் கலாச்சாரத்தோடு ஒட்டிப் பயணிக்கும் திரைக்கதையும் இல்லாவிட்டால், எவ்வளவு பிரமாண்டம் இருந்தாலும் பார்வையாளர் அதை நிராகரிப்பார் என்பதை டாக்ஸிக் நிரூபிக்கிறது.
ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா-மகன் வேடங்களில் நடிக்கும் யாஷ், மேல்நாட்டு ஆடைகளை அணிந்து பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, பலவகை பாட்டில்களில் மது அருந்துவது, கண் இமைக்கும் நேரத்தில் தலை, கை, கால்களை வெட்டுவது என வன்முறையும் ஆபாசமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார். அப்பாவும் மகனும் வன்முறைக்குச் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் கொத்துக்கொத்தாகக் கொலை செய்கிறார்கள். படம் முழுவதும் நடப்பது, சிகரெட் புகைப்பது, நிர்வாணமாக நிற்பது, துப்பாக்கிச் சண்டை, வெட்டி வீழ்த்துவது என்று செல்லும் யாஷ், கிளைமாக்ஸுக்கு முன்பு கொஞ்சம் நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் அங்கேயும் ஆக்ஷன் ஆதிக்கம் செலுத்துவதால், நடிகர் யாஷ் காணாமல் போய்விடுகிறார்.
யாஷின் சகோதரியாக நடிக்கும் நயன்தாரா, தொடக்கத்தில் சில அதிரடிக் காட்சிகளில் அமர்க்களமாக நுழைந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் செட் பிராபர்ட்டி போல அமைதியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.
முதல் மனைவியாக கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக ருக்மணி வசந்த், காதலியாக தாரா சுதாரியா, வில்லியாக ஹுமா குரேஷி என திரை நிரம்பியிருக்கும் நாயகிகளின் நடிப்பை விட அவர்களது ஆடைகளே அதிகம் கவனம் ஈர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கிராபிக்ஸ் காட்சிகளை காட்சிகளுடன் சரியாக இணைத்து படத்தை பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார். 1947-1970 காலத்து உடைகளையும் களத்தையும் காட்டப் பயன்படுத்திய வண்ணங்கள் பிரமிக்க வைக்கின்றன.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்குக் கைகொடுத்தாலும், வன்முறை நிரம்பியிருப்பதால் ஆங்காங்கே அதீத சத்தத்துடன் காதைப் பதம்பார்க்கிறது.
பல கிளைக்கதைகளும் ஏராளமான கதாபாத்திரங்களும் இருப்பதால், படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி குழம்பிப்போயிருப்பது கதை சொல்லும் முறையிலேயே தெரிகிறது. அந்தக் குழப்பம் பார்வையாளரிடமும் ஒட்டிக்கொள்கிறது. கதை சொல்வது தந்தையா, மகனா என்று புரியாமல் முதல் பாதி முடிந்ததும் “என்ன கதை?” என்று பக்கத்திலிருப்பவரிடம் கேட்கும் நிலை ஏற்படுகிறது. இரண்டாம் பாதியில் ஒருவழியாக இதுதான் கதை என்று புரியவைத்தாலும், இதற்காகவா இந்த அக்கப்போர் என்ற எண்ணமே மிஞ்சுகிறது.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸின் கதையில் கிளைக்கதைகள் பல இருந்தாலும், அவற்றைத் தெளிவாக விவரிக்காததும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்துக்கும் ஆக்ஷனுக்கும் முன்னுரிமை அளித்ததும் படத்தின் பெரிய பலவீனம்.
இயக்குநர் கீது மோகன்தாஸ், கதை எப்படி இருந்தாலும் ஹாலிவுட் பாணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற முடிவில், தேவையில்லாத காட்சிகளைத் திணித்து பார்வையாளரைச் சோர்வடைய வைத்திருக்கிறார். தொடக்கம் முதல் முடிவு வரை வன்முறைக் காட்சிகளும் பெண்களுடனான ஆபாசக் காட்சிகளும் அதிகம். எதையும் சுவாரஸ்யமாகச் சொல்லாமல் எரிச்சலூட்டும் வகையில் நகர்த்தி படத்தைச் சிதைத்திருக்கிறார்.
முரட்டுத்தனம் மிக்க யாஷ் கோபப்பட்டு வெட்டுவதும் சுட்டு வீழ்த்துவதும் தொடரும்போது, ஒரு கட்டத்தில் பார்வையாளருக்கே கத்தி தன் பக்கம் திரும்பிவிடுமோ என்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த அளவுக்குத் திரை முழுவதும் ஆயுதங்களும் பிணங்களும் நிறைந்து இரத்த ஆறு ஓடுகிறது.
ஸ்டைலிஷ், கம்பீரமான கதாநாயகன், பிரமாண்டக் காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் ஆகியவை பாராட்டப்பட வேண்டியவைதான். ஆனால், கதாபாத்திரங்களின் குழப்பம், இலக்கில்லாமல் ஓடும் திரைக்கதை, படத்தில் யார், யாருக்கு வில்லன் என புரியாமல் போவது, படத்திற்கே வில்லன்களாக அமைந்துவிட்டது.