‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என முன்னணி கதாநாயகர்களை வைத்து அதிரடியான படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
கதாநாயகனாக அவர் அறிமுகமாகியுள்ள படம் தான் ‘டிசி’. அதாவது ‘தேவதாஸ் – சந்திரா’ என்பதன் சுருக்கமே டிசி.
கொலை, கொள்ளை ஆகியவற்றை சர்வ சாதாரணமாக செய்து வரும் அரசு தலைமையிலான குழுவில் தேவதாஸ், கிட்டி, கருப்பு, செபாஸ்டியன் ஆகியோர் இருக்கிறார்கள்.
அரசுக்குச் சொந்தமான துப்பாக்கிகளைக் கடத்துகிறார்கள். அது தொடர்பான விசாரணை நடக்கும் போது அந்த வழியே சென்ற அப்பாவி ஒருவர் இன்ஸ்பெக்டரால் கொலை செய்யப்படுகிறார். தனது மகன் படிப்பிற்காக நிலத்தை விற்று அந்த அப்பாவி பணத்தை எடுத்துச் செல்லும் போதுதான் அது பற்றி அறிந்த அந்த இன்ஸ்பெக்டர் அவரைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்கிறார்.
அது பற்றி அறிந்த தேவதாஸ் அதற்குத் தானும் ஒரு காரணம் என நினைத்து, அந்த இன்ஸ்பெக்டரைக் கொலை செய்கிறார். துப்பாக்கிகள் கடத்தல், இன்ஸ்பெக்டர் கொலை ஆகியவற்றைச் செய்தது யார் என காவல்துறை விசாரிக்க ஆரம்பிக்கிறது. தலைமறைவாக இருக்கும் போது ஒரு ஹோட்டலில் பாடும் பார்வதி மீது காதல் கொள்கிறார் தேவதாஸ். ஒரு தகராறில் அந்த ஹோட்டல் ஓனர், லோகேஷ் கூட்டாளிகளைப் பற்றி போலீஸுக்குப் போட்டுக் கொடுக்க, காவல் துறை சுற்றி வளைக்கிறது. அப்போது நடக்கும் துப்பாக்கி சூட்டில் பார்வதி இறந்து போகிறார்.
போலீசிடமிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடும் தேவதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் வேறொரு கொலை சம்பவத்தின் போது சந்திராவை சந்திக்கிறார்கள். விபச்சாரத் தொழிலில் இருக்கும் அவர் இறந்து போன பார்வதி போலவே இருப்பதால் தேவதாஸ் அவரை மீட்டு வருகிறார். இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
லோகேஷ் கனகராஜுக்கு இது முதல் படம் என்று சொல்லவே முடியாத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எந்த ஒரு காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார் என்று சொல்லவே முடியாது. மிகவும் அசால்ட்டாக அந்த தேவதாஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். உடல்மொழி, பேச்சு, பார்வை என ஒட்டு மொத்தமாக ரசிகர்களைக் கவர்கிறார். அடுத்தடுத்து நல்ல கதைகளைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு புது கதாநாயகன் ரெடி.
கொஞ்ச நேரமே வந்தாலும் பார்வதி கதாபாத்திரத்தில் மனதில் இடம் பிடிக்கிறார் சஞ்சனா. அவரது பார்வையும் திடீர் மரணமும் கண்ணில் அப்படியே நிற்கிறது.
சந்திரா கதாபாத்திரத்தில் வாமிகா கபி. விபச்சாரத் தொழிலில் அவர் என்ன மாதிரியான கொடுமைகளை அனுபவிக்கிறார் என்பதை ஒரே காட்சியில் வெளிப்படுத்தி விடுகிறார் இயக்குனர். 18 வருடங்களாக இருட்டறையில் வாழ்ந்தவர், முதன் முதலில் வெளியில் வந்து சூரியனைப் பார்த்து மகிழும் அந்தக் காட்சியும், அதற்கான ஒளிப்பதிவும், பின்னணி இசையும் என்னவோ செய்கிறது. இவருக்கும் லோகேஷுக்கும் இடையில் உருவாகும் அந்தக் காதல் தெறிக்கும் ரத்தத்தின் நடுவே இனிய ரோஜாவாய் மலர்கிறது.
தேவதாஸ் நண்பர்களாக கிட்டி கதாபாத்திரத்தில் அவினாஷ் ரகுதேவன், கருப்பன் ஆக ஜவஹர் சக்தி, செபாஸ்டியன் ஆக பிரணவ் டியோபைன் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தேவதாஸ் அண்ட் கோ – வைப் பிடிக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரியாக கிரிஷ் தயாள், தலைவாசல் விஜய், சரத் ரவி, ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு மிகப் பெரிய பலமாக அனிருத் இசை அமைந்துள்ளது. பல காட்சிகளில் பின்னணி இசைக்கு இடம் கொடுக்கும் அளவிற்குக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். முகேஷ் ஒளிப்பதிவு, பிரசன்னாவின் இசை ஆகியவையும் படத்தைப் பற்றி பேச வைக்க முக்கியமானதாக அமைந்துள்ளன.
இரண்டரை மணி நேரம் போவது தெரியாத அளவிற்கு பரபரப்பாக நகர்கிறது படம்.
படத்தில் பல காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. ஒரு கேங்ஸ்டர் கதை என்றால் அவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். படத்தில் ஆங்காங்கே கெட்ட வார்த்தைகளும் உண்டு. அதற்காகத்தான் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்.
ஒரு மாணவனின் கல்விக்காக உதவ, தனது காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்க, அதிகாரத்தில் இருப்பவர்களின் அராஜகத்தை அடக்க என அனைத்தையும் சரியாக இணைத்து ரசிக்கும்படியான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.