ஜிடிஎன் – விமர்சனம்

தமிழ் மற்றும் வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் சிறு குறிப்பாக மட்டுமே இடம்பெறும் ஜி.டி.நாயுடு, உண்மையில் உலக நாடுகள் கொண்டாடிய மாபெரும் விஞ்ஞானியும் தொழில்துறை மேதையும் ஆவார். அவரது கனவுகள் எப்படி சிதைக்கப்பட்டன, யாரால் இடையூறுகள் வந்தன என்பதை உண்மைக்கு நெருக்கமாக, துணிச்சலுடன் திரையில் கொண்டு வந்திருப்பதே ‘ஜிடிஎன்’ படத்தின் சிறப்பு. கோவையில் பிறந்த கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் இளமை முதல் இறுதி வரை பயணிக்கும் இந்த வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகளுடன் சோதனைகளையும் சுவாரஸ்யமாக விவரிக்கிறது.

ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அவரது கண்டுபிடிப்புகளை அங்கீகரித்தபோதும், இந்திய அரசு அவரைப் புறக்கணித்ததோடு கனவுகளைச் சிதைக்கும் செயல்களில் ஈடுபட்டது என்பதை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் தைரியமாகப் பதிவு செய்திருக்கிறார். நாம் அறிந்திராத பல உண்மைகளை எளிமையான முறையில் திரைமொழியில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

ஜி.டி.நாயுடு வேடத்தில் மாதவன் தனது ஸ்டைலான, கம்பீரமான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்குக் கூடுதல் வலு சேர்த்திருக்கிறார். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவது போல, ஜி.டி.நாயுடு என்றாலே இனி மாதவன் முகமே நினைவில் நிற்கும். இளமை மற்றும் முதுமை இரு காலங்களிலும் தோற்றத்திலும் நடிப்பிலும் “இப்படித்தான் இருந்திருப்பாரோ” என வியக்கும் அளவுக்கு அவர் உருமாறியிருக்கிறார்.

வரித்துறை அதிகாரி அம்பலவானா கிருஷ்ணன் வேடத்தில் ஜெயராம் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். காமெடி நடிகராக அறிமுகமான அவர், இங்கு வில்லத்தனம் கலந்த நடிப்புடன் நேர்மையான அதிகாரியின் கோபத்தையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுகிறார். நண்பர் சிதம்பரம் பிள்ளை வேடத்தில் சத்யராஜ் தோற்றத்திலும் நடிப்பிலும் படத்திற்குப் பெரும் பலம் அளித்திருக்கிறார்.

துஷாரா விஜயன், பிரியா மணி, அதிதி பாலன், வினய் ராய், கருணாகரன், டீஜே அருணாச்சலம், மோகன் ராமன், தம்பி ராமையா, விஜய் யேசுதாஸ், ஷீலா ராஜ்குமார், பிரிகிடா சாகா, ஷில்பா ஸ்ரீகுமார் உள்ளிட்ட அனைவரும் தங்களது பாத்திரங்களுக்குப் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டு நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கமலநாதன் ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறார். ஜெர்மனி பயணம் மற்றும் ஹிட்லரிடம் விருது பெறும் காட்சிகளைக் கிராபிக்ஸ் மூலம் மிகச் சரியாகக் கையாண்டு வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

கோவிந்த் வசந்தாவின் இசை பழமை மாறாத கருவிகளின் ஒலியையும் நவீன உணர்வையும் இணைத்துக் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. பின்னணி இசை எங்கும் தனித்தன்மை காட்டாமல் இயல்பாகப் பயணித்து படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

தனிமனித வாழ்க்கை வரலாற்றை முழுக்க முழுக்க கமர்ஷியல் சினிமா பாணியில் நகர்த்தியிருக்கும் படத்தொகுப்பாளர்கள் பிஜித் பாலா மற்றும் கே.சசி குமார் ஆகியோரின் பணி சிறப்பு வாய்ந்தது. தயாரிப்பு வடிவமைப்பாளர் சிரில் குருவில்லா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன் ஆகியோர் பழைய வாகனங்கள், ஆடைகள், பின்னணிப் பொருட்கள் என அனைத்தையும் மிகக் கவனமாகக் கையாண்டிருப்பது படம் முழுவதும் தெரிகிறது.

கிருஷ்ணகுமார் ராம்குமார் மற்றும் ஆர்.மாதவன் இணைந்து எழுதிய திரைக்கதை ஜி.டி.நாயுடுவின் பயணத்தையும் சாதனைகளையும் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்கிறது. ஆனால் வரித்துறை சம்பவங்களைத் திரும்பத் திரும்பப் பேசுவதும் அதற்கான காட்சிகளை ரிப்பீட் மோடில் கையாண்டிருப்பதும் படத்தைச் சற்றுத் தொய்வடையச் செய்கிறது.

பல்வேறு பயணங்களைக் கொண்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை எளிமையாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார், காட்சிகளைக் கவனமாகக் கையாண்டு ஒரு தரமான படத்தை வழங்கியிருக்கிறார்.

சாதனைகளும் சோதனைகளும் ஒருபுறம் இருக்க, இறுதியில் தன் சொத்துக்களைக் காப்பாற்ற அவர் போடும் திட்டம் சற்று நெருடலாகத் தோன்றுகிறது. அதேநேரம், “தவறான வரி செலுத்தி எதிர்காலத் தலைமுறைக்குத் தவறான முன்னுதாரணமாக இருக்க மாட்டேன்” என்ற கொள்கையுடன் வாழ்ந்த ஜி.டி.நாயுடுவை இந்தப் படம் மூலம் இந்தியாவும் கொண்டாடும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

Read Previous

போட்டோகிராபர் – விமர்சனம்

Read Next

செய் செய்யாதே – இசை, டிரைலர் வெளியீட்டு விழா