‘திருவாளர் பஞ்சாங்கம்’ மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இணைந்திருக்கின்றனர்.
மலர்விழி நடேசன் கதை எழுதி இயக்கி, ஏசர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்துள்ள இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக டாக்டர் சிவானி சுப்பிரமணி செயல்படுகிறார். டி.இமான் இசையமைப்பில், ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பையும், ஷெரிப் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.
முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து, தற்போது பின்னணிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழு, ஊடகவியலாளர்களை சந்தித்து படம் தொடர்பான சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் மலர்விழி நடேசன் தனது பயணம் மற்றும் படம் குறித்து பேசும்போது, “நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றவில்லை. பள்ளி ஒன்றை நடத்தி, ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். பள்ளி நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்குக் கதை எழுதுதல், வசனம், உடை வடிவமைப்பு, நடிப்புப் பயிற்சி அளித்தல் போன்றவற்றின் வழியாகவே திரைப்படத்தின் மீது ஆர்வம் வளர்ந்தது. அப்படித்தான் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணம் உருவானது. ‘திருவாளர் பஞ்சாங்கம்’ என் முதல் படம்; ‘சிக்னல் அட் 11.30’ என் இரண்டாவது படைப்பு.
ஒருவரின் வாழ்க்கையில் 11.30 மணியளவில் நிகழும் ஒரு சம்பவம்தான் இந்தப் படத்தின் கதைக்கரு. தனிப்பட்ட ஒருவரின் வாழ்வில் நடக்கும் சிறு நிகழ்வு, அவரது வாழ்க்கையை எந்த அளவுக்குத் திருப்பிப்போடுகிறது என்பதைப் படம் விவரிக்கிறது. நான் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சிக்னலில் நின்றபோதுதான் இந்தக் கரு உதித்தது. அதனால்தான் அதையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்தேன். படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். ரொமான்ஸ் கலந்த திரில்லர் வகையைச் சேர்ந்த படம் இது.
இந்தப் படத்திற்கு அன்பும் முரட்டுத்தனமும் கலந்த, அதே நேரத்தில் ஹான்ஸமான கதாபாத்திரத்திற்குத் தகுதியான நடிகரைத் தேடியபோது, சந்தோஷ் பிரதாப் கிடைத்தார். அவரைப் பார்த்ததும் இவ்வேடத்திற்குப் பொருத்தமானவர் எனத் தோன்றியது. பேசியபோதும் ஒத்துப்போனதால் அவரை நாயகனாகத் தேர்வு செய்தோம். பவ்யா ட்ரிகாவும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக அமைந்தார். மற்றொரு நாயகி வேடத்திற்குச் சிறிது சிரமப்பட்டோம்; பின்னர் பூஜிதாவை ஒப்பந்தம் செய்தோம்.
படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. இப்போது பின்னணிப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் டிரெய்லரை வெளியிடவுள்ளோம். அதன்பிறகு வெளியீட்டுத் தேதியை அறிவிப்போம்,” என்றார்.
நாயகன் சந்தோஷ் பிரதாப் படம் பற்றிக் கூறியபோது, “முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பன்னிரண்டு ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருகிறேன். அனுபவம் வாய்ந்த பல இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன். சினிமா மீது எனக்குத் தனிப்பட்ட ஆர்வம் உண்டு. இயக்குநர் மலர்விழிக்கும் அதே ஆர்வம். அவரோடு பணியாற்றியது சிறந்த அனுபவமாக அமைந்தது. கதை அல்லது காட்சிகளில் என் கருத்துகளைச் சொன்னபோது, அவற்றை ஏற்றுக்கொண்டு செயல்பட்டார். நான் இதுவரை நடித்த அனைத்துப் படங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. அதேபோல் இந்தப் படமும் வித்தியாசமாக இருக்கும்.
என் கதாபாத்திரம் நெகட்டிவ் சேடுடன் இருக்குமா என்பதே படத்தின் சஸ்பென்ஸ். இப்படிப்பட்ட வேடங்களில் தொடர்ந்து நடிப்பதற்குக் காரணம், பலர் இம்மாதிரி வேடங்களை மறுப்பதால் என்னைத் தேடி வருவதுதான். ஆனால் கதாபாத்திரம் வேறுபட்டதாக இருப்பதால் நான் அவற்றை ஏற்கிறேன். இந்தப் படத்திலும் நீங்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ் இருக்கும்,” என்றார்.
நடிகை பவ்யா ட்ரிகா தனது அனுபவத்தைப் பகிர்ந்தபோது, “வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே காத்திருக்கிறேன். அப்படிப்பட்ட வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். என் வேடம் சஸ்பென்ஸ் நிறைந்ததாக அமையும். இந்தப் படத்திற்காக ஸ்கூட்டர் ஓட்டப் பழகினேன். உண்மையில் என் அம்மா என்னை ஸ்கூட்டர் ஓட்ட அனுமதிப்பதில்லை. ஆனால் படத்திற்காக வேகமாக ஓட்டினேன்,” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் சிவானி சுப்பிரமணி கூறும்போது, “நான் ஜெர்மனியில் படித்து வருகிறேன். விடுமுறைக்கு வந்தபோது அம்மா நேரடியாகப் படப்பிடிப்புத் தளத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போதுதான் அவர் படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. அவரது ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் ஆதரவாகத் தயாரிப்புப் பணியை ஏற்றேன். திரைப்படத் தயாரிப்பு எனக்குப் புதிய அனுபவமாக அமைந்தது,” என்றார்.
கதைக்கும் 11.30 மணிக்கும் உள்ள தொடர்பு, அது இரவா அல்லது பகலா என்ற கேள்விக்கு இயக்குநர் மலர்விழி பதிலளித்தார்: “இரவு அல்லது பகல் என்பதைக் குறிப்பிடாததற்குக் காரணம், அதுவும் படத்தின் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்பதே. படம் பார்க்கும்போதுதான் அது தெரியும். ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கும் சிறு சம்பவம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது, அதனால் என்னென்ன நிகழ்கின்றன என்பதே கதை. அதை சஸ்பென்ஸாக வடிவமைத்துள்ளோம். நாம் அனைவரும் கடந்துசெல்லும் ஒரு நிகழ்வுதான் இது; அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கலாம். அப்படி நடந்தால் என்னவெல்லாம் நிகழும் என்பதைக் கற்பனையாகச் சொல்லியிருக்கிறேன்.
சிக்னலில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. குறிப்பிட்ட சிக்னலில் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பிரச்சினை எழும். அவற்றைச் சமாளித்துக் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம். சிக்னல் படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ஒரு கதாபாத்திரமாகவே பார்வையாளர்கள் மனதில் இடம்பிடிக்கும்,” என்றார்.