ஜுலை 23ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்

தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடித் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியமணி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

இந்தப் படம் முன்னதாக ஜனவரி 9, 2026 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் போர்டுடனான நீண்ட சிக்கல்கள் காரணமாக தாமதமானது. படத்தின் சில காட்சிகள் தொடர்பாக சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு நீதிமன்ற வழக்குகள் வரை சென்றது. சமீபத்தில் சில மாற்றங்களுடன் ‘ஏ’ சான்றிதழ் பெறப்பட்டது.

மேலும், ஏப்ரல் 2026 இல் முழு படமும் இணையத்தில் லீக் ஆனது. இதனால் படம் பரவலாக பைரசி செய்யப்பட்டு, தயாரிப்பாளர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிட்டது. இந்த லீக் காரணமாக படத்திற்கு முன்னரே கணிசமான நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர அரசியலில் இறங்குவதால் இதுதான் தனது கடைசிப் படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். அதனால், தற்போது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளனர்.

Read Previous

அன்பே டயானா – டிரைலர்

Most Popular