‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடிக்க செளபின் ஷாகீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இதனை தயாரித்து வருகிறது. ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தற்போது ஆதித்யாராம் ஸ்டூடியோவில் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.
முதலில் ரஜினியுடன் நடிக்க உறுதியளித்திருந்தார் ஃபகத் பாசில். ஆனால் தேதிகள் இல்லாத காரணத்தினால் விலகிவிட்டார். இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பதால், படக்குழுவினர் பெரிதாக எடுத்துக் கொல்ளவில்லை.
தற்போது ஃபகத் பாசில் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் செளபின் ஷாகீர் நடிக்கவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை அனைத்துமே முடிவுற்று, ஒப்பந்தப் பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.