பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோ, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்ச்சி வருகிறது. உலகளவில் 3 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது. மேலும், வட அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் டாலர்கள் வசூல் குவித்திருக்கிறது. இது ‘பாகுபலி 2’ வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
‘கல்கி 2898 ஏடி’ படத்துக்குப் பிறகு, சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்ப்ரிட்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கவுள்ளார் பிரபாஸ். இதன் இறுதிகட்ட கதை விவாத பேச்சுவார்த்தை விரைவில் பிரபாஸ் உடன் நடைபெறவுள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் பிரபாஸ், விரைவில் இந்தியா திரும்பவுள்ளார்.
இதனிடையே, ‘ஸ்ப்ரிட்’ படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியான ‘அனிமல்’ படத்திலும் ராஷ்மிகா மந்தனா தான் நாயகியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய அடுத்த படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.