ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பு, கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது ‘அனிமல்’ படக்குழு.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அனிமல்’. 3:21 நேரம் ஓடிக்கூடிய படமாக வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்துக்கென்று இணையத்தில் ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.
மேலும், பிரபலங்கள் பலரும் ‘அனிமல்’ படத்தினை கடுமையாக விமர்சித்தார்கள். பெண்களை சித்திரித்த விதம், வசனங்கள் என கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதனிடையே, ஓடிடி தளத்தில் ‘அனிமல்’ வெளியிடப்பட்டது.
முன்னதாக, ஓடிடி தளத்தில் சில காட்சிகள் சேர்க்கப்பட்டு ’அனிமல்’ வெளியாகும் என்று தகவல் வெளியானது. இதனால், பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் தணிக்கை செய்யப்பட்ட படத்தினை மட்டுமே வெளியிடுவோம் என்று கூறியதால், 3:21 நிமிட படம் மட்டுமே வெளியானது.
அதுமட்டுமன்றி, ஓடிடி வெளியீட்டுக்கு பின்பு இணையத்தில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது ‘அனிமல்’ திரைப்படம்.
பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தினை பார்த்துவிட்டு, தங்களுடைய எக்ஸ் தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
திரையரங்கில் சுமார் 900 கோடி மேல் வசூலித்துவிட்டது ‘அனிமல்’. இதனால் எந்தவொரு விமர்சனத்தைப் பற்றியும் கவலையின்றி இருக்கிறது படக்குழு.
நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது விழாவில் ‘அனிமல்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை ரன்பீர் கபூர் வென்றது குறிப்பிடத்தக்கது.