‘அயலான்’ படத்தின் மீதிருந்த பைனான்ஸ் சிக்கல்கள் அனைத்துக்குமே தீர்வு ஏற்ப்ட்டு, வெற்றிகரமாக வெளியாகியுள்ளது.
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘அயலான்’.
24 ஏ.எம் நிறுவனம் சார்பில் முதலில் ஆர்.டி ராஜா தயாரிக்க தொடங்கப்பட்டது. ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரியத் தொடங்கினார்கள்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால் சிவகார்த்திகேயன் இந்தப் படத்துக்காக சம்பளம் எதுவுமே பெறவில்லை.
‘அயலான்’ படத்தின் கதைகளம் முழுக்க கிராபிக்ஸ் சம்பந்தப்பட்டது என்பதால் மிகுந்த பொருட்செலவு ஆனது. இந்தப் படத்திற்கு முன்னதாக ஆர்.டி.ராஜா தயாரிப்பில் வெளியான ‘ரெமோ’, ‘சீமராஜா’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால், அந்தப் படத்தின் மீதான கடன்கள் அனைத்துமே ‘அயலான்’ மீது ஏறியது.
‘அயலான்’ படத்தின் படப்பிடிப்புக்கே மிகவும் சிரமத்துக்கு ஆளாகும் சூழல் வந்தது. இந்நிலையில், ‘அயலான்’ படத்தின் மீதான மொத்த கடனையும் ஏற்று, படத்தையும் கைப்பற்றினார் தயாரிப்பாளர் ராஜேஷ். இதற்கு பதிலாக தனக்கு மூன்று படங்கள் பண்ண வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்.
அந்த ஒப்பந்தத்தின் படி வெளியான படங்கள் தான் ‘டாக்டர்’ மற்றும் ‘ஹீரோ’. இதில் ‘ஹீரோ’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
இந்தக் கட்டத்தில் ‘அயலான்’ படத்தின் மீதமுள்ள காட்சிகள் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஒட்டுமொத்த படத்தையும் முடித்து, கிராபிக்ஸ் பணிகளைத் தொடங்க பணம் தேவைப்பட்டது.
இதற்காக பேண்டம் எஃப்.எக்ஸ் நிறுவனம் புதிதாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ‘அயலான்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டது. அதாவது, கிராபிக்ஸ் பணிகளை முடித்துவிடுவோம், படத்தின் வசூலில் பங்கு என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
இதன் மூலம் ‘அயலான்’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணம் பிரச்சினை தீர்ந்தது. படத்தின் வெளியீட்டிற்கு சுமார் 35 கோடி ரூபாய் வரை தேவைப்பட்டது. இந்தச் சமயத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதவியை நாடினார் சிவகார்த்திகேயன்.
அப்போது இந்தப் படத்தினை நாங்கள் வெளியிடுகிறோம், வசூலில் வரும் தொகையை பைனான்சியர்களுக்கு கொடுக்கிறோம் என்ற உத்திரவாத கடிதம் அளித்தது.
அப்போது ‘அயலான்’ வெளியீட்டுச் சிக்கல் தீர்ந்தது.பின்னர், தயாரிப்பாளர் ராஜேஷ் தனக்கு ‘அயலான்’ படத்திற்காக பல்வேறு விநியோகஸ்தர்கள் முன் தொகை அடிப்படையில் கேட்பதால், நீங்கள் முன் தொகை தர வேண்டும் என பெரும் தொகை ஒன்றைக் கேட்டார்.
இது நமக்கு சரிபட்டு வராது என்று, நீங்கள் அவர்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று உத்திரவாத கடிதத்தினை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மீண்டும் ‘அயலான்’ வெளியீட்டுப் பிரச்சினை தொடங்கியது. மேலும், சில நீதிமன்ற வழக்குகளும் தொடரப்பட்டது. இதனால் கண்டிப்பாக வெளியாகாத சூழல் ஏற்பட்டது.
இறுதியாக சிவகார்த்திகேயன் அனைத்து பிரச்சினைகளையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறி, சுமார் 28 கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் அளித்திருக்கிறார். இது தமிழ் சினிமாவில் எந்தவொரு நாயகனும் செய்யாத ஒன்று என்று ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள் வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திரையுலகினர்.
இதனைத் தான் தயாரிப்பாளர் சிவாவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.நேற்று (ஜனவரி 11) இரவு சுமார் 7 மணிக்கு ‘அயலான்’ வெளியீடு உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பைனான்சியர்களிடமும் வெளியீட்டுக்கு தடையில்லா சான்றிதழ் பெறும் பணி தொடங்கியது.
அனைத்தும் பெற்று க்யூப் நிறுவனத்திற்கு இன்று (ஜனவரி 12) அதிகாலை 1 மணியளவில் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு முதலில் வெளிநாட்டு வெளியீட்டிற்கான பணிகள், தமிழ்நாட்டு பணிகள் தொடங்கி படம் வெளியாகியுள்ளது.
தற்போது ‘அயலான்’ படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைக்க தொடங்கியிருக்கிறது. இதற்கு சிவகார்த்திகேயன் சம்பளமின்றி நடித்தது மட்டுமல்லாது, இறுதியாக பல கோடிகளுக்கு உத்திரவாதம் அளித்ததும் மட்டுமே காரணம்.