தெலுங்குத் திரையுலகத்தில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படும் இயக்குனர்களில் ஒருவர் சேகர் கம்முலா. தனது முதல் படமான ‘டாலர் டிரீம்ஸ்’ படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.
தொடர்ந்து தெலுங்கில் ‘ஆனந்த், கோதாவரி, ஹேப்பி டேஸ், அவக்காய் பிரியாணி, லீடர், லைப் இஸ் பியூட்டிபுல், அனாமிகா, பிடா’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கில் அவர் இயக்கி நயன்தாரா நாயகியாக நடித்த ‘அனாமிகா’ படம் ஒரே சமயத்தில் தமிழிலும் ’நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது.
ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப் படம் இயக்க வருகிறார். தெலுங்கு, ஹிந்தியிலும் தயாராகப் போகும் இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஏற்கெனவே, தமிழைத் தவிர ஹிந்தியிலும் நடித்துள்ள தனுஷ் முதல் முறையாக நேரடித் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டார்கள். இப்படத்தை, நாராயண் தாஸ் கே நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஆசிய குழுமத்தின் ஒரு பிரிவு) நிறுவனத்தின் நான்காவது தயாரிப்பாக பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளது.
தனுஷ் தற்போது ‘த கிரே மேன்’ என்ற ஆங்கிலப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும், அண்ணன் செல்வராகவன் இயக்க உள்ள ‘நானே வருவேன்’ படத்திலும் நடிக்க உள்ளார்.
அப்படங்களுடன் இந்தப் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளது.