‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இசை வெளியீடு நடந்த, சென்னை – தேவி திரையரங்கத்திற்குள் நுழைவதற்கே வெகுநேரம் ஆனது. காரணம், அவ்வளவு ரசிகர்கள் கூட்டம்.
அனைத்தும் ‘அழைத்து’ வரப்பட்ட கூட்டம் அல்ல, ‘பவர் ஸ்டார்’ மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் ‘பாசத்தின்’ காரணமாக வந்த கூட்டம்.
இவ்வளவு ரசிகர்கள் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தாலே போதும் வெளியாகும் நல்ல படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியைப் பெற்று விடும்.
நாம், உள்ளே நுழைந்த நேரம், ‘பவர் ஸ்டார்’ நுழைவதற்கும் சரியாக இருந்ததால், ஒரே ‘பட்டாசு’ச் சத்தம், மவுன்ட் ரோடில் கொஞ்ச நேரம் ’டிராஃபிக் ஜாம்’ என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதை விட, தியேட்டருக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு கூட இடமில்லை. விட்டால், மேடை மீதே அவ்வளவு கூட்டமும் ஏறியிருப்பார்கள் போல. நல்ல வேளையாக அப்படி நடப்பதற்குள் சுதாரித்துக் கொண்டனர் விழாக் குழுவினர்.
பவர் ஸ்டார், முன் யங் சூப்பர் ஸ்டார், காமெடி சூப்பர் ஸ்டார், ஏன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட அமைதியாகிப் போய் விட்டார்கள்.
‘பவர் ஸ்டார்’ பெயரை உச்சரித்தால் நமக்கும் கைதட்டல்கள் நிச்சயம் (! ) உணர்ந்த திரை உலகினர் கூட பவர் ஸ்டார் பெயரை உச்சரித்து, அதிகமான கைதட்டல்களை பெற்றுக் கொண்டார்கள்.
இயக்குனர் ஷங்கல் மட்டும் அதற்கு விதிவிலக்கு. தப்பித் தவறிக் கூட அவர் பவர் ஸ்டார் பெயரை உச்சரிக்கவில்லை. பின்னாலிருந்து ‘எங்க பவர் ஸ்டாரப் பத்தி சொல்லு’ என்று எழுந்த சத்தத்தைக் கூட அவர் கண்டு கொள்ளவில்லை.
பெரிய பெரிய ஆளுயர மாலைகள் அரங்கத்திற்குள் நுழைந்திருந்தன. ஆனால் கடைசி வரை அந்த மாலைகள் யார் கழுத்திலும் விழவில்லை. எங்கோ ‘மாயமாக’ மறைந்து விட்டிருந்தன.
சந்தானம், நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல தயாரிப்பாளரும்தான் என்பதை இந்த படம் நிரூபிக்கும். ஏனென்றால், விளம்பரமே இல்லாமல் கூட அவரால் படத்தை ஓட்டி விட முடியும்.
அதற்குத்தான் ‘பவர் ஸ்டார்’ இருக்கிறாரே.
சரி, படத்தோட பாடல்களைப் பத்தி சொல்லவேயில்லையே, உண்மையிலேயே ஒரு காமெடி படத்துக்கு என்ன வேணுமோ அதை கொடுத்திருந்தாரு இசையமைப்பாளர் தமன்.
விழாவுக்கு வந்த இயக்குனர் ஷங்கர், சிம்பு , மற்ற திரையுலகினர் கூட அடிக்கடி விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு கலகலப்பாக விழா நடந்தேறியது.
“சந்தானம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், படத்தோட வெற்றி விழாவை தயவு செய்து இப்படி ஒரு சின்ன (?) தியேட்டருக்குள்ள வச்சிடாதீங்க, சென்னையிலயே இருக்கிற ஒரு பெரிய மைதானமா பார்த்து வையுங்க…அப்பதான் கூடுற (?) கூட்டத்தை கன்ட்ரோல் பண்ண முடியும்.”