தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா, விஷால், தனுஷ், சத்யராஜ், சிவகுமார், ஜெயம் ரவி, பரத், உதயநிதி ஸ்டாலின், நடிகைகள் ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, லிஸி, ரம்யா கிருஷ்ணன், தன்ஷிகா, த்ரிஷா, உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் மற்றும் திரையுலகினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்ட முடிவில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை,
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தமிழக மாணவர்களுக்கு நன்றி.
இலங்கை அரசு தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்கு மவரை இலங்கைக்கு இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த் தியாகம் செய்யாமல் அறவழியில் போராட வேண்டும்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழ் ஈழத்தை வற்புறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.
ஆகிய மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
