தமிழ் சினிமாவின் மகத்தான கவிஞரான வாலி இன்று மாலை உடல்நலக் குறைவால் சென்னையில், தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இன்றைய தலைமுறைக்கும் பொருத்தமான பாடல்களை எழுதக் கூடியவர் என்று பெயர் பெற்ற ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் இயற் பெயர் டி.எஸ். ரங்கராஜன்.
ஸ்ரீரங்கத்தில் 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி பிறந்தவர்.
இளம் பருவத்தில் ஸ்ரீரங்கத்தில் ‘நேதாஜி’ என்னும் கையெழுத்துப் பிரதியை துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் பிரபல எழுத்தாளர் கல்கி. அந்த விழாவிற்கு திருச்சி வானொலி நிலைய அதிகாரியான பார்த்தாசாரதியும் வந்திருந்தார்.
அவர் திருச்சி வானொலிக்கு, நாடகங்கள், கதைகள் ஆகியவற்றை எழுதிக் கொடுக்கும் வாய்ப்பை வாலிக்கு வழங்கினார்.
அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்தாளர் சுஜாதாவும் பங்கெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் ஆனந்த விகடன் பத்திரிகையில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலி மீது கொண்ட பற்றால், இவரும் தன் பெயரை வாலி என்று வைத்துக் கொண்டார். வாலி சிறந்த ஓவியர் என்பது பலருக்குத் தெரியாத ஒன்று.
சிறுகதை, கதை, கவிதை, உரை நடை என பலவிதமான புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
அவதார புருஷன், கிருஷ்ண விஜயம், பாண்டவர் பூமி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இதுவரை 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். 1960 மற்றும் 70களில் எம்ஜிஆரின் கடைக்கண் பார்வை பட்டதால் அவரின் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றார். இவர் எழுதிய பல பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்று நினைப்பவர் பலர் உண்டு.
நகைச்சுவை நடிகர் நாகேஷ், வாலியின் நெருங்கிய நண்பர். அவர்தான் வாலிக்கு திரைப்படங்களில் பாடல்கள் எழுதும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.
அன்றைய எம்ஜிஆர், சிவாஜி முதல் இன்றைய சிம்பு , தனுஷ் வரை பல ஹீரோ, ஹீரோயின்கள் நடித்துள்ள படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.
இன்றைய இளம் பாடலாசிரியர்களுக்கு சவால் விடும் விதத்தில் பல புதுமையான இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமான வார்த்தைகளை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்து யதார்த்தமான நடிகர் என்றும் பெயர் பெற்றவர். பொய்க்கால் குதிரை (1982), சத்யா (1988), ஹே ராம் (2000)பார்த்தாலே பரவசம் (2001) ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் எழுதிய “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற முதல் பாடல் 1959ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி வெளிவந்த “அழகர் மலை கள்வன்’ என்ற படத்தில் இடம் பெற்றது.(பாடியவர் பி. சுசீலா, இசை – பி.கோபாலன்) இந்த முதல் பாடலில் சில திருத்தங்களை செய்தது அண்ணாதுரை.
நாளை வெளியாக உள்ள ‘மரியான்’ படம் வரை பாடல்கள் எழுதியிருக்கிறார்.
1963ம் ஆண்டு வெளிவந்த ‘கற்பகம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் திரையுலகத்தின் வெளிச்சம் அவர் மீது பாய்ந்தது. ஏறக்குறைய 40 ஆண்டுகள் யாருமே அசைக்க முடியாத, அவருக்கென்று ஒரு தனி இடம் இந்த தமிழ்த் திரையுகில் இருந்தது, இன்னும் இருக்கப் போகிறது. இதை யாராலும் மீண்டும் சாதிக்க முடியாது.
தொடர்ந்து எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன், தாழம்பூ, பணம் படைத்தவன்,” போன்ற திரைப்படங்கள் அவரை பட்டி, தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தன.
எந்த இசையமைப்பாளரயும், தயாரிப்பாளரையும் நம்பி நான் கிடையாது என வாலி கூறியிருக்கிறார். அதை அடிக்கடி நிரூபித்தும் இருக்கிறார்.
அவர்கள் இவரைத் தேடி சென்றிருக்கிறார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் எம்ஜிஆரிடமே கோபித்துக் கொண்டவர்.
“பாட்டு எழுதுகிறோம், பணம் வருகிறது என்று குறையொன்றுமில்லை கோவிந்தா என்று என்னால் இருக்க முடியாது. பணத்தோடு சேர்ந்து என் பாடல்களுக்கு பாராட்டும் வரவேண்டும்,” என்று கூறுவாராம்.
இதை அனைத்துப் பாடல்களிலும் நிரூபித்திருக்கிறார்.
ஒரு படம் தோல்வியானாலும், வாலியின் பாடல் வரிகள் குறிப்பிட்டும் சொல்லும்படிதான் இதுவரை இருந்திருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘மன்னன்’ திரைப்படத்தில் இடம் பெற்ற “அம்மா என்றழைக்காத உயிரில்லையே…” பாடல் இதுவரை வெளிவந்த அம்மா பாடல்களிலேயே சிறந்ததாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
2007ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. ஆனால், எண்ணற்ற சிறந்த பாடல்களை எழுதிய வாலிக்கு , இதுவரை தேசிய விருது வழங்காதது அந்த விருதுக்குத்தான் ஒரு குறை.
வாலியைப் பற்றி கவிஞர் பழனிபாரதி கூறியதாவது, “1931ம் ஆண்டு தமிழ் சினிமா பேச ஆரம்பித்தது. அப்போது பிறந்தவர்தான் வாலி. தமிழ் சினிமாவும், வாலியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். தமிழ் சினிமா என்றால் வாலியை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. வாலி என்றால் தமிழ் சினிமாவை நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது”.
உலகத்தில் யாருமே இனியும் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை வாலி சாதித்திருக்கிறார். எந்த மொழியிலும் இல்லாத அளவிற்கு 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய ஒரே கவிஞர். இந்த சாதனையை இனி யாருமே முறியடிக்க முடியாது.
வாலி மறைந்தாலும், இந்த வானில் அவரது வார்த்தைகள் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்…
நமக்கு நினைவுபடுத்திக் கொண்டுதானிருக்கும்…
– கவி
