‘தலைவா’ படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரிவிலக்கு இல்லாமலும், அரசின் ஆதரவு இல்லாமலும் படத்தை வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதையடுத்து, என்ன செய்யலாம் என படக்குழுவினரும், திரையுலகத்தைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து பேசி வருவகின்றனர்.
ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ள சில காட்சிகளை நீக்க படம் சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து வரிவிலக்கு பெறுவதற்கான முறையான வழிவகைகளை செய்யவும் முயற்சிகள் நடந்துவருவதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே, ‘தலைவா’ பட வெளியீடு காரணமாக தள்ளி வைக்கப்பட்ட ‘தங்க மீன்கள், பொன்மாலைப் பொழுது’, போன்ற பல சின்ன படங்களின் வெளியீடும் இதனால் இன்னும் தள்ளிப் போகுமா எனவும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
எப்படியோ, பிரச்சனையை மேலும் பெரிதாக்காமல், முடிந்தவரை படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் மட்டுமே நடந்து வருவதாகத் தெரிகிறது.
இதனிடையே, தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ‘தலைவா’ திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரசிகர்கள், பக்கத்திலுள்ள மற்ற மாநிலத் திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்த்து வருகின்றனர்.
இன்றும் பேச்சு வார்த்தை நடந்து வருவதால், விரைவில் இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு ஏற்படும் என்று தெரிகிறது.