தலைப்பில் சொன்ன சம்பளத்தை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வாங்கிய படம் ‘16 வயதினிலே’. படம் வெளிவந்த ஆண்டு 1977.
வெறும் நான்கே முக்கால் லட்சம் ரூபாய் செலவில், 28 ரோல்களைக் கொண்டு மட்டுமே எடுக்கப்பட்ட படம் ‘16 வயதினிலே’.
சினிமாஸ்கோப், டிஜிட்டலில் மாற்றப்பட்டு விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை கமலா சினிமாஸ் திரையரங்கில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாக்யராஜ், பார்த்திபன், தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, படத்தின் ஸ்ரீதேவியின் காதலராக நடித்த சத்யஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு ஸ்ரீதேவியும், இளையராஜாவும் வராததுதான் மிகப் பெரிய குறை.
இருந்தாலும் நண்பன் இளையராஜாவைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பாரதிராஜா. இந்த படத்தின் வெற்றிக்கான 50 சதவீதப் பங்கு இளையராஜாவையே சாரும் என்றார்.
“இப்படத்தின் வெளியீட்டால் வரும் பணம் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவுக்குத்தான் சேரும் என்று தெரிந்ததும் இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன். காரணம் அவ்வளவு நல்ல மனிதர் அவர். கமல்ஹாசன் ‘விஸ்வரூபம்’ பட வெளியீட்டில் சிக்கித் தவித்த போது முதன் முதலாக ஆதரவுக் குரல் கொடுத்தவர் அவர்தான். அவருக்காகவாவது இந்த படம் மீண்டும் வெற்றிகரமாக ஓட வேண்டும் ,”என்று ரஜினிகாந்த் பேசினார்.
கமல்ஹாசன் பேசுகையில், “இந்த படம் தயாராகிக் கொண்டிருக்கும் போதே படத்திற்கு ஒரு பிஆர்ஓ போல பார்ப்பவர்களிடம் எல்லாம் இந்த படத்தின் ஆல்பத்தைக் காட்டுவேன். இந்த படத்தைப் பற்றி பாராட்டுபவர்களை விட, திட்டுபவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக சினிமாவில் ஒரு ஜாம்பனாக இருந்தவர், படம் ரிலீசானவுடன் ‘படம் அவுட்டு’, ‘கோமணத்தை உருவிட்டோமில்ல,’ என்று கமென்ட் செய்தார். ஆனால், அவர் சொல்லியதற்கு மாறாக படம் மாபெரும் வெற்றி பெற்றது, ” என்றார்.
36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வெளிவர இருக்கும் ஒரு படத்தின் விழாவில், தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில், கடைசியாக ஒரு மதத்தின் பரப்புரை நன்றியுரை என்ற பேச்சால் நடந்ததுதான் எதிர்பாராத ஒரு விஷயம்.
இப்படத்தை வெளியிடும், ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் – தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் மகள் நன்றியுரை என்ற பெயரில் உலகம் அழியப் போகிறது. புதிய உலகம் உருவாக இருக்கிறது , அதில் பங்கேற்க வாருங்கள் என ரஜினியையும் கமலையும் அழைத்ததுதான் உச்சகட்டம்.
ரஜினியும், கமலும் அந்த படத்தில் நடித்த போது கிடைத்த அதிர்ச்சியை விட நன்றியுரை சொன்னவர் பேசுவதைக் கேட்டு திகைத்துப் போய் விட்டனர்.
