இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா உடல் நலக் குறைவால் சற்று முன்னர், சென்னையில் காலமானார்.
1977ம் ஆண்டு வெளிவந்தத ‘கோகிலா’ என்ற கன்னடப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து “அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, வீடு, சந்தியா ராகம், ரெட்டைவால் குருவி, மறுபடியும், சதீ லீலாவதி, ராமன் அப்துல்லா, ” உட்பட பல படங்களை இயக்கினார்.
2005ம் ஆண்டு தனுஷ் நடித்த ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தை இயக்கினார். அதன் பின் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத போதும் அவரே முதன் முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘தலைமுறைகள்’ என்ற படத்தை இயக்கினார்.
இயற்கையான ஒளிப்பதிவுக்கும், இளையராஜாவின் இசைக்கும் தீவிர ரசிகர்.
சினிமா மீது தீராத காதலைக் கொண்டவர். சினிமா நிகழ்ச்சிகளுக்கு யார் அழைத்தாலும் கலந்து கொண்டு, சினிமாவைப் பற்றிய பல விவரங்களை சொல்பவர்.
கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் அவர் இயக்கிய முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. இப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தை ஹிந்தியிலும் அவரே இயக்கி ஸ்ரீதேவியை நாயகியாக நடிக்க வைத்தார். இதன் பின்தான் ஸ்ரீதேவி ஹிந்தித் திரையுலகில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.
இவர் இயக்கிய ‘வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள்’ போன்ற படங்களும் தேசிய விருதைப் பெற்றன. இரண்டு முறை ஒளிப்பதிவுக்காக தேசிய விருதையும் வாங்கியிருக்கிறார்.
இன்றைய முன்னணி இயக்குனர்களான பாலா, வெற்றி மாறன், ராம் ஆகியோர் பாலுமகேந்திராவின் உதவியாளர்களே.
1972ம் ஆண்டு வெளிவந்த ‘பனிமுடக்கு’ என்ற மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர் பாலுமகேந்திரா.
தமிழ் சினிமா ஒரு தரமான இயக்குனரை இழந்து விட்டது…
