சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரின் தாடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம் கூட காதல் தோல்விதான் என்று சொல்வார்கள்.
இனி, சிம்பு கூட அப்பாவைப் போலவே தாடி வளர்த்து விடுவார் போலிருக்கிறது. அவருக்கும் காதலுக்கும் அவ்வளவு தூரமாகி விட்டது.
சில வருடங்களுக்கு முன் நயன்தாராவை காதலித்தார். இருவரும் ஒன்றாக நெருக்கமாக சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின் திடீரென இருவரும் பிரிந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்தே ட்விட்டரின் மூலம் தாங்கள் இருவரும் காதலர்கள் என்று அறிவித்தனர். இது இன்னும் எத்தனை நாளைக்கு என வாயை மென்றவர்கள் பல பேர். அதன்படியே நேற்று சிம்புவே ஒரு அறிக்கையின் மூலம் தான் இனி தனியொருவன் என அறிவித்து விட்டார்.
இதுவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இருவரும் 5 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வோம் என சொல்லியிருந்தனர். ஆனால், கடந்த சில வாரங்களாகவே பத்திரிகைகளும், இணையதளங்களும் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டனர் என எழுதி வந்தனர். அது இப்போது உண்மையாகி விட்டது.
இதற்கான காரணத்தை விசாரித்த போது ஒரு சில தகவல்கள் கிடைத்தன.
ஹன்சிகாவின் அம்மாவுக்கு இந்த காதலில் ஆரம்பத்தில் இருந்தே துளி கூட விருப்பமில்லையாம். காதலர்களை பிரிப்பதற்காக பல வழிகளை கையாண்டாராம். ஹன்சிகாவை சிம்பு எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியாதபடி பல தடைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதனால்தான் சிம்பு வெறுத்துப் போனார் என்கிறார்கள்.
அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா மீண்டும் நடிப்பதை ஹன்சிகா விரும்பவில்லையாம். திடீரென நயன்தாராவை ஜோடியாக்கியது ஹன்சிகாவுக்கு கடும் வெறுப்பை ஏற்படுத்தியதாம்.
சமீபத்தில் கூட விமான நிலையத்தில் நயன்தாராவும், ஹன்சிகாவும் யதேச்சையாக நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தாலும் இருவரும் முகத்தை வேறு வேறு பக்கம் திருப்பிக் கொண்டு சென்றார்கள் என்று செய்திகள் வெளியாகியது.
அப்படி ஒரு செய்தி வெளியான உடனே சிம்புவின் இந்த அறிக்கை வெளியானதையும் முடிச்சு போட்டு பேசுகிறார்கள். யாரை திருப்திப்படுத்த சிம்பு இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறார் என்று கேள்வி கேட்கிறார்கள்.
எப்படியோ சிம்புவின் இரண்டாவது காதலும் தோல்வியில் போய் முடிந்து விட்டது.
“இனி என்னுடைய கேரியரை மட்டும் பார்க்கப் போகிறேன், இப்போது மகிழ்ச்சியாகவும், விடுபட்ட மனநிலையிலும் இருக்கிறேன், ” என சிம்பு அவரது அறிக்கைய முடித்திருப்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன.
“காதல் வளர்த்தேன்…காதல் வளர்த்தேன்…நெஞ்சுக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…” என இனி பாட மாட்டார் என்று நம்புவோமாக…
