பாலியில் தொழிலாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் யுரேகா இயக்கத்தில் சிவ சரவணன், அனிஷ் யுவானி இசையமைப்பில் சான்ட்ரா எமி, யுரேகா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் யுரேகா பேசும் போது,
“இது ஆபாசம் சார்ந்த படம் அல்ல. பொதுவா ஒரு பாலியல் தொழிலாளி அப்படின்னாலே, வாயில வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு, தொப்புள் தெரிய, அவள் சந்துகளிலே நடக்கிறவள் என்கிற சித்தாந்தத்தை உடைத்த படம் இது.
இந்த திரைப்படத்திற்கு பின்னர், பாலியல் தொழிலாளி என்ற வார்த்தை பாலியல் போராளி என்று மாறப் போகிறது. இது பாலியல் போராளியை முன் வைத்த ஒரு படம் மட்டும் கிடையாது. இது சமுதாயம் சார்ந்த ஒரு திரைப்படம். குழந்தைகள் மீதான பாலில் வன்முறைக்கு எதிரான ஒரு திரைப்படம்
கள ஆய்வு செய்து, பல வருடங்கள் இதற்காக உழைத்து ஒரு படைப்பாளியாக நான் பாடுபட்ட நாட்கள் அதிகம். ஆதி தொழிலாகிய இந்த தொழிலை ஒழிக்க வேண்டுமென்றால், ஒரு வட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த தொழிலை அங்கீகரிக்க வேண்டும்.
இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் ஆபாசம் இல்லாதபடி இன்றைய காலகட்டத்திற்கேற்றபடி கொடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டினார்கள்.
இது வணிக நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட திரைப்படம் அல்ல. சமுதாயத்திலே நான் சந்தித்த வன்முறைக் களங்களை ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லித்தான், சென்னைக்கு ஒரு சிவப்பு விளக்கு பகுதி தேவை என்ற அறைகூவலை வைத்திருக்கிறோம்.
இப்ப இருக்கிற பிரச்சனையில இது வேற தேவையான்னு ஒரு கேள்வி வரும். சென்னை போன்ற நகர் சார்ந்த பகுதிகளில் கட்டவிழ்க்கப்படுகிற வன்முறைக்கு ஒரு தீர்வாக, இந்த தொழிலை அங்கீகரித்து பிரித்தெடுத்து விட்டால், அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும். இதற்காக பல அமைப்புகளுடன் பேசி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுத்தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
இது ஒவ்வொரு குடும்பமும் பார்த்து கண்ணீர் சிந்த வேண்டிய ஒரு படம். ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்முறைக்கு பலி கொடுத்த ஒரு தகப்பனுடைய கண்ணீர் இந்த திரைப்படம்.
நிறங்களில்லாத வண்ணத்துப் பூச்சியாக இந்த சமுதாயத்திலே உலா வந்து கொண்டிருக்கிற ஒரு பாலியல் போராளியினுடைய சுமைகளை கண்ணீரோடு சொல்லியிருக்கும் படம்.
எனக்கு நடந்தது உனக்கும் நடக்கலாம். உனக்கு நடந்தது உன் அயலானுக்கும் நடக்கலாம், என்ற கருத்தைச் சொல்லியிருகும் படம்” என்கிறார் இயக்குனர் யுரேகா.
இந்த படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் சான்ட்ரா எமி நடித்திருக்கிறார். இயக்குனர் யுரேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
