புகழை விட வெற்றிதான் முக்கியம் – சுஜா வருணி

alibaba-okkade-thonga

தமிழில், சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும், தனி பாடல்களில் நடனமாடிய சுஜா வருணி, இனி தனிப் பாடல்களில் ஆடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறார்.

தெலுங்கில் வெற்றிப் பட நாயகியாகிவிட்டார். தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஆலி-யுடன் அவர் ஜோடியாக நடித்த ‘ஆலிபாபா ஒக்கடெ தொங்கா’ மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாம்.

ஆந்திர ரசிகர்களின் மனதை அப்படியே அள்ளி விட்டாராம் சுஜா. ஹைதராபாத்தில் மட்டுமல்லாது ஆந்திரா முழுவதுமே திரும்பிய பக்கமெல்லாம் அப்படத்தின் விளம்பரங்களை வைத்ததால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார் சுஜா.

“படத்தின் கதாநாயகன் ஆலி. சீனியர் நடிகர். அந்தப் படத்தில் நான் நடித்த போது பலரும் என்னைக் கேட்டார்கள். நீபோய் அவருடன் நடிக்கலாமா? ஒரு காமடியனுடன் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கிறாயே, என்றெல்லாம் குழப்பினார்கள். நான் கேள்விகளை பொறுமையாக எதிர் கொண்டேன்.

ஆனால் யார் கூட நடிப்பது என்பது எனக்கு பிரச்சினை இல்லை. நம் கேரக்டர் எப்படி என்று மட்டும்தான் பார்ப்பேன். அந்த விதத்தில் ‘ஆலிபாபா ஒக்கடெ தொங்கா’அமைந்தது. அந்தப்படத்தை எனக்கு நடிக்க வாய்ப்புள்ள ஒன்றாகக் கருதினேன், அதனால் நடித்தேன்,” என ஆந்திர அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நான்  தனிப் பாடலுக்கு ஆடுவதை நிறுத்திவிட்டேன். நல்ல கேரக்டர் உள்ள நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். ஏனோ தானோ ரோல்களில் நடிக்க விரும்பவில்லை.

வருகிற வாய்ப்புகளில் எல்லாம் நடிப்பது என்றால் எத்தனையோ படங்களில் நடிக்கலாம். அதில் அர்த்தமில்லை. அப்படி நடிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு புகழை விட வெற்றி முக்கியம். அதுவும் அர்த்த முள்ளதாக இருக்க வேண்டும்,” என்கிறார்.

 

 

Read Previous

இரு மேதாவிகளின் காதல் ‘அதி மேதாவிகள்’…

Read Next

‘கங்காரு’ படம் எனக்கு ஒரு ‘பாச மலர்’ – ஸ்ரீபிரியங்கா