அரசூர் மூவீஸ் தயாரிப்பில் ஏ. கோவிந்தமூர்த்தி இயக்கத்தில் விஜய் எபினேசர் இசையமைப்பில் செந்தில், இஷாரா, சரண்யா, நரேன், இளவரசு, ஜெகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பப்பாளி’.
இப் படத்தின் பத்தரிகையாளர் சந்திப்பும், இசை வெளியீடும் நேற்று நடந்தது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா நடித்துள்ளார். இவரிடம் படத்தின் இயக்குனர் கதையை சொல்லும் போது, சில மாற்றங்களை சொல்லியிருக்கிறார். அது நன்றாக இருந்ததால், அதற்கு சம்மதித்து கதையையே மாற்றியிருக்கிறார் இயக்குனர் கோவிந்த மூர்த்தி.
இது பற்றி நிகழ்ச்சியில் இயக்குனர் கோவிந்தமூர்த்தி பேசியதாவது,
“இந்த படத்துல வர்ற ஒரு முக்கியமான கேரக்டர்ல சரண்யா மேடம் நடிச்சால் நல்லா இருக்கும்னு நினைச்சேன். எல்லா படத்துலயும் அவங்க அம்மாவாதான நடிக்கிறாங்க. இந்த படத்துல மாமியார் கேரக்டர், அதுவும் ரொம்ப ரொம்ப நல்ல மாமியார் கேரக்டர் ஒண்ணு இருக்கு. அதுல அவங்க நடிச்சால் படத்துக்கு இன்னும் சிறப்பா இருக்கும்னு நினைச்சி அவங்ககிட்ட போய் கதைய சொன்னேன்.
படத்தோட கதைய கேட்டு ரொம்ப இன்வால்வ் ஆகிட்டாங்க. கதை நல்லா இருக்கு. ஆனால், இப்படி மாத்தினீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்னு பதில் சொன்னாங்க. சரி மேடம், அப்புறம் வர்றன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
திரும்பவும் ஒரு நாலு நாளைக்கப்புறம் , அவங்க சொன்ன மாற்றங்களோட கதைய சொன்னேன். அதான் இந்த ‘பப்பாளி’. அவங்க செய்ய சொன்ன மாற்றங்களே உண்மையிலே முக்கியமானது.
படம் முடிஞ்சதுக்கப்புறம் அவங்க பேரை இணை இயக்குனர்-னு போடறேன் மேடம்னு சொன்னேன் அவங்க சம்மதிக்கவேயில்லை. அந்த அளவுக்கு இந்த படத்துல ரொம்ப ஈடுபாட்டோட நடிச்சிக் கொடுத்திருக்காங்க,” என்றார்.
இதற்கு முன் பேசிய சரண்யா, “இந்த படம் கல்வி சம்பந்தமான ஒரு படம். அவர் என்கிட்ட இந்த கதையை சொன்னப்போ, என் வீட்டுல என்ன நடந்திட்டிருக்கோ, அதை அப்படியே சொன்ன மாதிரி இருந்தது. அவர் சொன்ன ஒவ்வொரு வசனமும் அப்ப நான் + 1 படிக்கிற என் மகள் கிட்ட நிஜமாவே சொல்லிட்டிருந்தது. படிக்கிற பசங்களுக்காக நாம கூடவே இருந்துட்டிருக்கிற காலம் இது.
அதனால இந்த படம் என்னை ரொம்பவே ஈடுபட வச்சது. ஷுட்டிங்-ல நடிக்கும் போது கூட டைரக்டர் கிட்ட சார், இப்படி பேசினால் நல்லா இருக்கும்னு சில ஐடியா சொல்வேன். வீட்டுக்கு வந்து என் பொண்ணுகிட்ட இன்னைக்கு உன் கிட்ட என்ன சொல்றனோ, அதேதான் இன்னைக்கு நான் நடிச்சிட்டு வந்தேன்னு சொல்வேன்.
மாமியாரை முதல் முறையா நல்லவங்களா காட்டியிருக்கிற படம் இந்த படம்தான். மருமகன் நல்லா இருந்தால்தான் நம்ம பொண்ணு நல்லா இருப்பான்னுதான் எல்லா மாமியாரும் நினைப்பாங்க. இந்த படத்தை ஒவ்வொருத்தரும் அவங்க குடும்பத்தோட தொடர்புப்படுத்திப் பார்க்கிற மாதிரி இருக்கும்.
நிறைய படங்கள்ல தொடர்ந்து ஹீரோவுக்கு அம்மாவாதான் நடிச்சிட்டு வர்றன், ஆனால், இந்த படத்துல ஹீரோயினுக்கு அம்மாவா நடிச்சாலும், ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ற கேரக்டர், ” என்றார்.
‘பப்பாளி’ பழம் உடம்புக்கு நல்ல, இந்த படமும் சமூகத்துக்கு நல்லதா அமையட்டும்.