தமிழ் சினிமாவில் பல புதியவர்களின் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும் காலம் இது. எண்ணற்ற புதுப்புது படைப்பாளிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.
‘டிஜிட்டல்’ சினிமா வந்த பிறகு இந்த ஆரோக்கிய மாற்றம் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த புதியவர்களின் வரவால் தமிழ் சினிமா பற்றிய பார்வையும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட எண்ணம் கொண்ட இளைஞர்களின் படைப்புதான் ‘ர’. பிளான் ஏ ஸ்டுடியோஸ் சார்பாக அமீன் மற்றும் அக்பர் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.
விமான பைலட்டாக இருக்கும் பிரபு யுவராஜ், அஷ்ரப் இந்த படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். பிரபு யுவராஜ் இயக்கமும் செய்ய, அஷ்ரப் படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படத்தை இயக்கும் பிரபு யுவராஜ், மணிரத்னம், செல்வராகவன் வரிசையில் யாரிடமும் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவராம். திரைப்படங்களைப் பார்ப்பதே ஒரு பெரிய அனுபவம் என்கிறார். வீட்டில் மட்டும் இரண்டு லட்சம் படங்களின் டிவிடிக்கள் வைத்திருக்கிறாராம். படங்களைப் பார்த்தே பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.
இப்படத்திற்கு ராஜ் ஆரன் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பல மலையாளப் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த தேசிய விருது பெற்ற பூமிநாதனின் மகன் பிரேம் பூமிநாதன் இந்த படத்தில் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.
அஷ்ரப், அதிதி செங்கப்பா, லாரன்ஸ் ராமு, ஜெ.பி. ஜெய், ரவி பிரகாசம் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குனர் பிரபு யுவராஜ் கூறுகையில்,
‘‘ர’ தமிழ்ல ‘பறிமுதல், அபகரித்தல்’ – னு அர்த்தம். நானும், ஹீரோவும் விமான பைலட்…இரண்டு பேரும் சேர்ந்துதான் கதை எழுதினோம்.
இந்த படத்தை நம்மளால பண்ண முடியுமான்னு முதல்ல யோசிச்சோம். ஹீரோவை மையமா வச்சி எழுதப்பட்ட கதை. ஸ்கிரிப்ட் மேல இருக்கிற நம்பிக்கையில இந்த படத்தை உருவாக்கினோம்.
மொத்தமா பிரண்ட்ஸா சேர்ந்து பண்ண படம். தயாரிப்பாளர் அமீன் எங்க நண்பர்தான். இந்த படம் ஒரு ஃபேன்டஸி த்ரில்லர். இரண்டு மணி நேர படத்துல, ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் படத்தோட ‘ஃபீல்’ மாறிக்கிட்டேயிருக்கும். அடுத்து என்ன நடக்கம்னு கண்டுபிடிக்க முடியாது.
கொஞ்சமா கிராஃபிக்ஸ் சேர்த்திருக்கோம். ஒரே ஒரு பாட்டு, ஆனால் சிடி-ல ஐந்து பாடல்கள் வச்சிருக்கோம்.
ஹீரோவை ஏதோ ஒண்ணு அபகரிக்க ட்ரை பண்ணுது. அதுதான் படத்தோட கதை. ஒரு விஷயத்தை ஹீரோ தப்பா பண்ணப் போக, அவரை அபகரிக்க ஒரு ‘சக்தி’ முயற்சி செய்யுது. அந்த சக்தியை அமானுஷ்யம்னு வச்சிக்கலாம்.
இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டால், த்ரில்லர் படத்தைப் பார்க்கிறதுல த்ரில்லிங்கே இருக்காது. இப்பவே முழு கதையையும் சொல்லிட்டால் சுவாரசியம் இருக்காது. ஆனால், படத்தைப் பார்த்தால் நிச்சயமா ஒரு வித்தியாசமான படத்தைப் பண்ணியிருக்கோம்கற உணர்வு ரசிகர்களுக்கு உருவாகும்,” என்றார் இயக்குனர் பிரபு யுவராஜ்.
எல்லார் மனசையும் ‘ர’ பண்ணிடுவாங்க போல இருக்கே…