தேவையின்றி குற்றம் சுமத்துகிறார்கள் – அமலா பால்

amala paul 0105அமலா பால் திருமணச் செய்தியால் எங்களது படம் பாதிக்கப்பட்டது என ‘வஸ்தா நீ வேணுகா’ என்ற தெலுங்குப் படத்தின் குழுவினர் அமலா பால் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.

அவரது திருமணத்தைப் பற்றி எங்களிடம் தெரிவிக்காததால் திட்டமிட்டபடி வெளிநாட்டில் படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தனர்.

அதனால் அவர்களது படத்திலிருந்து அமலா பாலை நீக்கி  விட்டோம் என்றும் தெலுங்குப் பட நிறுவனம்  கூறியிருந்தது.

அவர்களது குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பு நிறுவனம் சொன்ன தேதியில் வேறு ஏதோ காரணங்களால் படப்பிடிப்பை நடத்த  முடியாமல் போக, என் மீது தேவையின்றி குற்றம் சுமத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

“‘வஸ்தா நீ வேணுகா’ பட நிறுவனம் என்னை முதலில் தொடர்பு கொண்ட போது, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை உள்ள கால கட்டத்தில் 45 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கூறினார்கள். நானும் அதற்கு சம்மதித்து இருவரும் உடன்பாடு செய்து கொண்டோம்.

படப்பிடிப்புக்கான நாட்கள் நெருங்கி வரும் சூழ்நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள பல்வேறு முறைகளில் நான் முயற்சி செய்தேன். அவர்கள் தொடர்பில் வந்தாலும் அவர்களிடமிருந்து திருப்திகரமான பதில் வரவில்லை.

திரை உலகில் இது சகஜம் என்று நானும் என்னுடைய மற்ற பட வேலைகளின் இடையே அவர்களுக்கும் தேதி கொடுக்கலாம் என அணுகிய போதும் இப்போது, அப்போது என்ற உறுதியில்லாத பதிலே அவர்களிடமிருந்து வந்தது.

பொதுவாக வெளி நாட்டில் படப்பிடிப்பு என்றால் என்னுடைய பாஸ் போர்ட் உட்பட என்னுடைய உதவியாளர்கள் பாஸ்போர்ட் வரை விசாவுக்காக சமர்பிக்க வேண்டும். ஆனால், இது வரை வெளி நாட்டில் படமாக்கப் போகிறோம் என்று கூறிக் கொள்ளும் அந்த பட நிறுவனத்தினர் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதே அவர்களின் ஈடுபாட்டுக்கு ஒரு அத்தாட்சி.

இந்த நிலையில் நான், என்னுடைய திருமணத்தைப் பற்றி முன்னரே அவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு என்னை காயப்படுத்துகிறது. நான் அவர்களுக்கு கொடுத்தது மார்ச் முதல் மே வரை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் 45 நாட்கள் மட்டுமே.

இதில் ஜூன் மாதம் நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி அவர்களுக்கு நான் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன ? சொல்லப்பட்ட காலத்துக்குள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருப்பதற்கு பலவேறு உண்மையான காரணங்கள் இருக்க என் திருமணத்தை சுட்டிக் காட்டி அவர்கள் தேவையின்றி பேசுவது அநாகரீகமானது.

திருமண பந்தம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்க வேண்டிய ஒரு அரிய நிகழ்ச்சி ஆகும், எனக்கும் அப்படித்தான். தங்களது தவறுகளை மறைக்க என் மீதும் என் திருமணச் சடங்கின் மீதும் குற்றஞ்சாட்டுவது மிகவும் வருத்தத்துக்குரியது.

நான் இதுவரை எந்த தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ இடையூறாக இருந்ததே இல்லை, இருக்கவும் மாட்டேன். இந்த விளக்க உரை கூட யாரையும் குற்றம் சாட்டவோ, குறை கூறவோ இல்லை. என்னை அறிந்தவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் உண்மை நிலை கூறுவதற்காகத்தான்’ என அமலா பால் தெரிவித்துள்ளார்.

 

 

Read Previous

“வாடா..டேய்..என் புருஷா..” – கல்யாணப் பொண்ணு சின்மயி பாடிய பாடல்…

Read Next

அஞ்சான் – கிளாமரில் அசத்தும் சமந்தா…