‘கோச்சடையான்’ படம் பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்தி வெளியாவதும், கடைசியில் அது உண்மையாகிப் போவதும் வாடிக்கையாகிவிட்டது.
படம் ஆரம்பமான நாளிலிருந்து எவ்வளவோ செய்திகளை சந்தித்து விட்டது ‘கோச்சடையான்’. கடைசியாக ரிலீஸ் நேரத்திலும் பிரச்சனை வந்து விட்டது.
இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். மே 9ம் தேதி வெளியாகவிருந்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வேஷன் ஆரம்பமான நாளிலிருந்தே ஆயிரக்கணக்கானோர் அவர்களது டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விட்டனர்.
‘கோச்சடையான்’ வெளியீடு ஏன் தள்ளிப் போனது என தமிழ்நாடு என்டர்டெயின்மென்ட் ராமானுஜம் அவர்களிடம் கேட்ட போது,
“கோச்சடையான்’ திரைப்படத்தின் வெளியீடு நிதிப் பிரச்சனை காரணமாகவே தள்ளிப் போயுள்ளது. தமிழில் இதுவரை எந்த ஒரு திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கு அதிக பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டது.
‘மினிமம் கியாரண்டி’ அடிப்படையிலான அந்த வியாபாரத்தில் தியேட்டர்காரர்கள் மிகவும் தயக்கம் காட்டுகின்றனர். ரஜினிகாந்த் நிஜமாக நடித்த படங்களுக்கு வசூலாகும் உச்சபட்ட தொகையை விட, இந்தப் படத்திற்கு கூடுதலாக எம்ஜி கேட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
‘சி’ சென்டர்களில் கூட 7 லட்சம், 10 லட்சம் என்று எம்ஜி கேட்பதால், இந்தப் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ‘சி’ சென்டர்களில் மிகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 6000ஐக் கூடத் தாண்டுவதில்லை. இது வெற்றிப் படங்களுக்கான எண்ணிக்கை. சுமாரான படங்களுக்கு, 2000ஐக் கூட தாண்டுவதில்லை.
இந்த கணக்கின் அடிப்படையில் 6000 பார்வையாளர் எண்ணிக்கையில், 6000 x 100 என்றால் கூட 6,00,000 லட்ச ரூபாய்தான் மொத்த வசூலாகும்.
இதில் தியேட்டர்காரர்களுக்கான பங்குத் தொகை இதர செலவுகள் போக 4,20,000 ரூபாய்தான் தயாரிப்பாளருக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ கிடைக்கும். இந்த நிலையில் 7 லட்சம், 10 லட்சம் என்று கேட்டால் படத்தை எப்படி திரையிட முன் வருவார்கள். திரையிட்டு நஷ்டப்படுவதை விட திரையிடாமல் இருப்பதே மேல் என திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் நினைக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
அடுத்து படம் எப்போது திரைக்கு வரும் என்பது முறைப்படி அறிவிக்கப்படவில்லை என்றாலும் அநேகமாக மே 23ம் தேதி வெளி வரும் என சொல்கிறார்கள்.
படத்தின் வெளியீடு தாமதத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனால், இத்திரைப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ரஜினியின் உண்மையான வியாபாரத்திற்கு மேல் இத்திரைப்படத்திற்கு இருமடங்கு செலவாகியிருப்பதால், அத்தொகையை வியாபார ரீதியாக ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுவதால் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.
இதுவரை எந்தவொரு ரஜினி படம் இப்படி சொன்ன தேதியில் வெளியாகாமல் தள்ளிப் போனதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கோச்சடையான்’ படம் சொன்ன தேதியில் வெளிவராமல் போனதால் ரஜினி ரசிகர்கள் பெருத்த ஏமாற்றத்தையும், வெறுப்பையும் அடைந்துள்ளனர்.
திரையரங்குகளில் முன்பதிவு செய்தவர்கள் தற்போது பணத்தை திரும்பப் பெறுவதற்காக அவர்களது நேரத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
‘ட்விட்டர், யு டியூப்’ என படத்தின் பிரமோஷனுக்கு ரஜினிகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கிய நேரத்தில் ‘கோச்சடையான்’ வெளியீடு தள்ளிப் போனது திரையுலக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.