செலிப்ஸ் அண்ட் ரெட்கார்பட் ‘நிறுவனம் மூலம் ராஜ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. இந்தப் படத்தில் அபிஷேக் வினோத், ‘மைனா’ சேது, பூஜா உமாசங்கர், ஸ்வேதா விஜய், இயக்குனர் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள நல்லவன், கெட்டவனில் எவன் எப்போது வருவான் என்று யாருக்கும் தெரியாது. இந்த கருத்தை மையமாக வைத்து உருவான படம்தான் ‘கடவுள் பாதி மிருகம் பாதி’. சென்னை டு ஹைதராபாத் பழைய ஹைவேயில் முதல்நாள் இரவு தொடங்கி மறுநாள் இரவில் முடிவடையும்படியான ஒரே நாளில் நடக்கும் கதை.
ராகுல் ராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அடுத்து பேசிய இயக்குனர் ராஜ், “எங்கள் முதல் முயற்சி இது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. இந்த விழாவுக்கு 1000 பேரைக் கூப்பிட்டேன். கொஞ்சம் சிலபேர்தான் வந்திருக்கிறார்கள். ஆர்யா வை நடிக்க கூப்பிட்டேன், ஆனால் என்னை காக்க வைத்து ஏமாற்றி விட்டார்”என்றார்.
அப்போது அவரை இடைமறித்த பூஜா.. “இப்படி மடத்தனமா பேசினா எப்படி? ஏன்டா.. இப்படி கை கால் எல்லாம் ஆடுது. டான்ஸ் ஆடாதே. நேரா நின்னு பேசுடா.. ஒழுங்காக முதலில் வந்தவர்களை வரவேற்று விட்டுப் பேசு..அதுவும் தமிழில் பேசு.”என்று அறிவுரை வழங்கினார்.
மேடையில் பூஜா, இயக்குனரை வாடா…போடா… என்று பேசியதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பூஜாவும் இயக்குனர் ராஜும், பெங்களூரில் படித்த காலத்திலிருந்தே நண்பர்களாம்.
பூஜா, இயக்குனர் ராஜைப் பற்றி பேசும் போது, “ஒரு நாள் ராஜ் படமெடுக்கிறேன் என்று வந்து சொன்னான். ‘என்னடா நம்பவே முடியவில்லையே’ என்றேன். ‘படம் டைரக்ஷன் பண்றேன், நானேதான் தயாரிப்பாளர்’ என்றான். ‘பொய் சொல்லாதே’ என்றேன். ‘உண்மைதான்’ என்றான்.
என்னிடம் ‘ஒரு கேமியோ ரோல் பண்ண வேண்டும், ஆனால் காசு மட்டும் கேட்காதே, என்னிடம் பணமில்லை. இருந்தாலும் நீ நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். உடனே ஓகேசொன்னேன். 3 நாள் படப்பிடிப்பு போனேன். ராஜ் 16 வயதிலிருந்து நண்பன் அவன் படமெடுப்பது மிக்க மகிழ்ச்சி.
இந்த ராஜ் தங்கமான மனசுக்காரன். இவனது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், என்று முடித்தவர் ராஜைப் பார்த்து, ‘நமக்குள் ஒன்றும் இல்லைதானே?’ என்று கேட்க, இயக்குநர் ராஜ், “இப்போதும் நான் உனக்காகக் காத்திருக்கிறேன், “என்றார்.
மேடையில் கலகலப்பாக ஒரு காதல் நாடகமே நடைபெற்று விட்டது.