‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஹரி – விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் ‘பூஜை’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இவர்களுடன் சத்யராஜ், சூரி, ராதிகா சரத்குமார், முகேஷ் திவாரி, ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், பிரதாப் போத்தன், பிளாக் பாண்டி, மனோபாலா, சுந்தர்ராஜன், இமான் அண்ணாச்சி, அபிநயா, கௌசல்யா, சிதாரா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஆன்ட்ரியா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக திட்டமிட்டதற்கு முன்னதாகவே ஒவ்வொரு கட்டப் படப்பிடிப்பும் நடந்து வருவதால் படத்தின் தயாரிப்பாளரான விஷால் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறாராம்.
தற்போது ‘பூஜை’ படக் குழுவினர் பத்து நாள் படப்பிடிப்பிற்காக பீகார் மாநிலம் சென்றுள்ளனர். அங்கு பரபரப்பான சேசிங் காட்சிகளும், கிளைமாக்சில் இடம் பெற உள்ள ஆக்ஷன் காட்சிகளும் அங்கு படமாக உள்ளன.
அங்கு நடைபெற உள்ள படப்பிடிப்பில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிஜ அரசியல்வாதி ஒருவர் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார். அங்கு நடக்கும் படப்பிடிப்புடன் 95 சதவீத படப்பிடிப்பு முடிவடைகிறது.
இதற்குப் பின் மூன்று பாடல் காட்சிகள் மட்டும் படமாக வேண்டுமாம். அந்தப் பாடல்கள் சென்னை, ஹைதராபாத், ஸ்விட்சர்லாந்து ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளன. யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷாலின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனம் மிகப் பெரிய தொகை கொடுத்து திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது.