‘அரவிந்தன்’ தமிழ்ப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன்ஷங்கர் ராஜா தொடர்ந்து பல தமிழ்ப் படங்களுக்கும், தெலுங்குப் படங்களுக்கும் இசையைமத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
திரையுலகிற்கு அறிமுகமாகி சுமார் 17 வருடங்கள் கழித்துதான் யுவன்ஷங்கர் ராஜா, ‘ராஜா நட்வர்லால்’ என்ற இந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முதலில் இந்தப் படத்திற்கு ப்ரீத்தம் இசையமைப்பதாக இருந்தது. அவர்தான் இயக்குனரிடம் யுவன்ஷங்கர் ராஜாவை வைத்து இசையமத்துப் பாருங்களேன் என்று சொல்லியிருக்கிறார். யுவனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய திறமை மீது நம்பிக்கை வைத்து இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைக்கிறார் இயக்குனர் குணால் தேஷ்முக்.
இம்ரான் ஹஷ்மி, பாகிஸ்தான் நடிகையான ஹுமைமா மாலிக், பரேஷ் ராவல், கே கே மேனன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இம்மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக உள்ளது.