‘சரபம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகியிருப்பவர் சலோனி லுத்ரா. மும்பையிலிருந்து வந்திறங்கியுள்ள மற்றுமொரு நடிகை.
கதக் நடனத்தில் தேர்வு பெற்ற சலோனி நடிப்பில் ‘தியேட்டர்’ எனப்படும் பயிலரங்குகளில் பயிற்சி பெற்றுள்ளார். மும்பையில் திரைக் கலைஞர்களுக்கான ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்வீர் கபூருடன் இணைந்து நடனம் ஆடியது தன்னுடைய வாழ்வில் முக்கிய தருணம் , அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ரன்வீர் கபூர் தன்னிடம் ‘ உன் கவனத்தை திரை உலகம் பக்கம் திருப்பு என்றதே தனக்குத் தூண்டுகோல்” என்கிறார் சலோனி.
“பிரபல தயாரிப்பாளரான சி.வி. குமார் தயாரிப்பில் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகம் ஆனது என்னுடைய பாக்கியம். ‘சரபம்’ கதாபாத்திரத்தை வடிவமைத்த இயக்குனர் அருண் குமார் அந்த பாத்திரத்துக்கு உயிர் ஊட்டியதை போலவே என்னுடைய நடிப்பு பயணத்துக்கும் உயிர் ஊட்டினார்.
‘சரபம்’ படத்தில் நான் இந்த அளவுக்கு நடித்து இருப்பதற்கும் அந்த கதாபாத்திரத்தின் வெற்றிக்கும் விக்ரம் சாருக்குத்தான் நன்றி என்பேன். நான் பார்த்தது குறைந்த அளவே தமிழ் படங்கள்தான் என்றாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது விக்ரம் சாரின் ‘அந்நியன்’ தான். நொடியில் முகம் மாறும் அந்த நடிப்புதான் எனக்கு உந்துதல் எனலாம்.
எனக்கு மிகவும் சவாலாக இருந்தது ‘சரபம்’ படத்தில் இடம் பெற்ற புகை பிடிக்கும் காட்சிகள் தான். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்பதால் நான் பல்வேறு படங்களில் கதாநாயகிகள் புகை பிடிப்பதைப் பார்த்து எனெக்கென ஒரு பாணியை வைத்து கொண்டேன். சென்னையின் சூழ்நிலையும் , தமிழ் சினிமாவும் பிடித்து விட்டதால் இங்கேயே குடி இருக்கலாம் என முடிவும் செய்துள்ளேன். இதுவரை எனக்கு வரும் வாய்ப்புகள் எல்லாமே ‘ சரபம்’ படத்தின் பாத்திரம் போலவே உள்ளது. அதை நான் தவிர்க்க விரும்புகிறேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்கவே எனக்கு விருப்பம்,’ என்கிறார் சலோனி லுத்ரா.