‘அஞ்சான்’ படம் இந்திய அளவில் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் சிலர் அளித்த விமர்சனங்கள் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
‘பி அன்ட் சி’ என்று சொல்லப்படும் திரைப்படங்களை அதிகம் விரும்பிப் பார்க்கும் ரசிகர்களை இப்படிப்பட்ட விமர்சனங்கள் எந்த விதத்திலும் பாதிக்காது என பல வருடங்களாக திரைப்பட வினியோகத் துறையில் இருந்து வரும் நமது நண்பர் தெரிவிக்கிறார். ‘ஏ’ சென்டர்களில் இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் இருந்தாலும், படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி வருவது சூர்யாவுக்குப் போட்டியாக இருந்து வரும் சில நடிகர்களின் ரசிகர்கள்தான் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் வரிசையில் எங்கே சூர்யாவும் இடம் பிடித்து விடுவாரோ என்ற அச்சத்தில்தான் படத்திற்கு இப்படிப்பட்ட கருத்தை அவர்கள் பரப்பி வருகிறார்கள். இந்தப் படத்தை முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட்டை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கியுள்ளதாக படத்தின் இயக்குனரான லிங்குசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இது ஒரு சிலருக்கான படம் மட்டுமல்ல, அனைவருக்குமான படம் என்றும் சூர்யா தெரிவித்தார்.
ஒரு கமர்ஷியல் படத்தை அந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்க வேண்டும், ஏதோ சினிமாவை தலை கீழாக புரட்டிப் போட வந்த படம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.
இதனிடையே ‘அஞ்சான்’ படம் முதல் வார இறுதியில் சுமார் 27 கோடி ரூபாயை இந்திய அளவில் வசூல் செய்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்து வெளிவந்த ‘வீரம்’ படம் 17 கோடி ரூபாயையும், விஜய் நடித்து வெளிவந்த ‘ஜில்லா’ படம் 20 கோடி ரூபாயையும் வசூலித்ததாம். இந்த இரண்டு படங்களின் வசூலை ‘அஞ்சான்’ முறியடித்துள்ளது.
அது மட்டுமல்ல உலக அளவில் ‘அஞ்சான்’ படம் இதுவரை சுமார் 45 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் வெளியான படங்களில் முதல் வாரத்திலேயே ஒரு படம் இந்த அளவிற்கு வசூல் செய்வது இதுவே முதல் முறையாம்.