வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா, நாசர் மற்றும் பலர் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஒருவர் விடாமல் நன்றி கூறி நீ…….ண்டதொரு பேச்சை வழங்கினார்.
பொதுவாக ஏ.ஆர்.ரகுமான் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வது அபூர்வம் என்பதால் அனைத்து பத்திரிகையாளர்களும் ரகுமான் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு மணி நேரம் கடந்த பிறகு கடைசியாகவே ரகுமான் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசியது சில வரிகள்தான் என்றாலும் அதில் இருக்கும் அர்த்தம் இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கும், ஏன் அவருக்கே உரிய கேள்வியாகவுமே எடுத்துக் கொள்ளலாம்.
அவர் பேசியதாவது,
“இந்தப் படத்துல நானும் இணைந்து பணிபுரியறது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு. நான் இப்போ ஒரு மூணு ஜெனரேஷனைப் பார்த்திருக்கேன். ஒரு ஜெனரேஷன் வாசிச்சிருக்கேன். இரண்டு ஜெனரேஷன் இசையமைச்சிருக்கேன். நீங்கதான் நெக்ஸ்ட் ஜெனரேஷன். இந்தப் படத்திற்கு எனக்கு கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியுடன் இரண்டு வாரத்துக்கு முன்னாடி நான் பேசிக் கொண்டிருந்த போது, ஏன் உங்க இந்தியப் படங்கள்ல உங்கள் கலாச்சார இசையயைப் பதிவு செய்யாமல், மேற்கத்திய இசையை பயன்படுத்துகிறீர்கள் என்றார். நான் அவருக்கு இந்த ‘காவியத் தலைவன்’ படத்தைக் கண்டிப்பா போட்டுக் காட்டுவேன், ” என்றார்.
இளையராஜாவால் கிராமிய இசை தமிழ்த் திரையுலகில் பரவ ஆரம்பித்த பின், ரகுமான் வரவால் மேற்கத்திய இசையின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்தது. அவரும் அவ்வப்போது கிராமிய இசையைக் கொடுத்தாலும் மேற்கத்திய இசையால்தான் அதிகம் கவர்ந்தார். இந்தப் படத்தின் மூலம் தொடர்ந்து ரகுமான் நமது கலாச்சாரா இசையைப் பதிவு செய்தால் நமது இசை உலகம் முழுவதற்கும் போய்ச் சேரும் நிலை உருவாகும்.