இயக்குனர் ஷங்கர் நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ திரைப்படத்தை வெளியிட உள்ளார்.
ஐ ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக். ஜி. கிருஷ் இயக்குனராக அறிமுகமாகிறார்.
நாயகனாக வைபவ் , நாயகியாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சோனம் பிரீத் நடித்து உள்ளனர். ‘கப்பல்’ படத்தினைப் பார்த்த இயக்குனர் ஷங்கர் படம் பார்த்த பின்னர் இயக்குனர் கார்த்திக்கிடம் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார். அதோடு அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுக் கொண்டு அவருடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் வெளியிடவும் முடிவெடுத்துள்ளார்.
இதை பற்றி இயக்குனர் ஷங்கர் கூறியதாவது ‘ நீண்ட இடை வெளிக்கு பிறகு என்னுடைய எஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் ஒரு திரைப்படத்தை வாங்கி உள்ளோம். என்னுடன் பல படங்களில் பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கப்பல்’ படத்தை பார்த்த பின்னர் அந்த படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்துள்ளேன். இப்படத்தை பார்க்க ஆரம்பித்த போது சிரித்த நான் கடைசி வரை சிரித்துக் கொண்டேதான் இருந்தேன். ‘கப்பல்’ எல்லா தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. அனைத்து ரசிகர்களும் இந்த படத்தை ரசித்துக் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை,” என்றார்.