சத்தியமா நான் துரோகி கிடையாது – விஜய் பேச்சு

kaththi audio launch vijay speech news‘கத்தி’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சமந்தா, இசையமைப்பாளர் அனிருத், சதீஷ், தயாரிப்பாளர்கள் சுபாஷ்கரன் அல்லிராஜா, கருணாமூர்த்தி மற்றும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நேற்றைய விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் நாயகன் விஜய் ஆகியோரது பேச்சு அவர்களுடைய தமிழ் உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

விஜய் பேசும் போது,

“நான் நடிக்கும் படங்களைப் பற்றியே நான் எப்போதும் அதிகம் பேசமாட்டேன். இந்தப் படம் எனக்கும் இயக்குனர் முருகதாசுக்கும் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரே ஒரு விஷயம் நான் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.

‘கத்தி’ படத்தை நாங்கள் சண்டை போடுவதற்காக எடுக்கவில்லை. அனைத்து விதமான ரசிகர்களும் அவங்களோட சண்டை, சச்சரவு எல்லாத்தையும் மறந்து நிம்மதியா, சந்தோஷமா இந்தப் படத்தை ரசிக்கணும்கறதுக்காகத்தான் எடுத்திருக்கோம்.

எந்த மக்களுக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இந்தப் படத்தை எடுக்கலை. என்னை தியாகின்னு நான் சொல்லிக்க மாட்டேன். சத்தியமா நான் துரோகியும் கிடையாது.

நிறைய பேர் ஏன் நான் பிரச்சனைகளைப் பத்தி பேசாம சைலண்டா இருக்கன்னு சொன்னாங்க. என்னோட தயாரிப்பாளர்கள் பேசணும்னு ஆசைப்பட்டேன், பேசிட்டாங்க.

அது மட்டுமில்ல, உண்மைக்கு விளக்கம் கொடுத்தால் தெளிவாகும். அதுவே வதந்திக்கு விளக்கம் கொடுத்தீங்கன்னா அது உண்மையாகிடும்.

தமிழ் நாடு, நான் தமிழன். ஒரு ஜோசியக்காரன் சொன்னாரு. ஒரு 50 வயசு வரைக்கும் உங்களுக்கு அப்படி, இப்படித்தான் இருக்கும்னாரு. அப்புறம்னு கேட்டேன், அதுவே பழகிடும்னாரு, சரி, அத விடுங்க.

இந்த விழாவிற்கு வந்த சக கலைஞர்கள், திரையுலகினர், என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி,” என விஜய் பேசினார்.

Read Previous

தமிழ்நாடும், தமிழ் மக்களும் போட்ட பிச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…