ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு இன்று சில பல கோடிகளை இறைக்க வேண்டியிருப்பதால், ஏதாவது ஒரு பரபரப்பைக் கிளப்புவதை சில இயக்குனர்கள் அவர்களது கைவசம் வைத்திருக்கிறார்கள்.
இந்தியத் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மா, சமீப காலமாக ஹிந்திப் படங்களை இயக்காமல் தெலுங்குப் படங்களை இயக்கி வருகிறார். ‘ஐஸ் க்ரீம், ஐஸ் க்ரீம் 2’, தற்போது ‘ஸ்ரீதேவி’ என அவருடைய சமீபத்திய படங்கள் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டுதான் இருக்கின்றன.
‘ஐஸ் க்ரீம்’ படத்தில் நாயகியான தேஜஸ்வியை நிர்வாணக் காட்சியில் நடிக்க வைத்தார் என்றார்கள், அதன் பின் ‘ஐஸ் க்ரீம் 2’ படத்தில் நாயகி நவீனாவை மிகவும் ஆபாசமாகக் காட்டியிருக்கிறார் என்கிறார்கள். தற்போது ‘ஸ்ரீதேவி’ படத்தில் ஒரு பத்து வயது சிறுவன் ஒரு இளம் பெண்ணை கண்ட கண்ட இடங்களில் உற்றுப் பார்ப்பதைப் போன்ற சில போஸ்டர்களை ராம்கோபால் வர்மா வெளியிட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்தான் ஆமீர் கான் ஆடையில்லாமல் அவரது ‘பிகே’ போஸ்டரை வெளியிட்டு ஒரு சர்ச்சையைக் கிளப்பினார். தற்போது ராம்கோபால் வர்மாவின் ‘ஸ்ரீதேவி’ பட போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு சிறுவன், ஒரு அறைக்குள் படுத்திருக்கும் பெண்ணின் கால்களை ஜன்னல் வழியே பார்ப்பது போன்ற ஒரு போஸ்டர், முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பின் பக்கத்தை பார்ப்பது போன்ற மற்றொரு போஸ்டர், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியைப் பார்க்கும் இன்னொரு போஸ்டர் என மூன்றுமே ஆபாசத்தின் உச்சத்தில் இருப்பதாகவும், சிறுவர்களின் உரிமைகளை மீறுவதாகவும் இருப்பதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீதேவி’ பட போஸ்டர்களை மட்டும் பார்த்து விட்டு மலிவான விளம்பரத்திற்காக சிலர் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். வயது குறைந்த ஒருவன் வயதான பெண்மணி மீது ஆசைப்படுவது போன்று இதற்கு முன் எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளன. படத்தின் கருத்தில் வரம்பு மீறல் இருந்தால் அதை சென்சார் போர்டு பார்த்துக் கொள்ளும்.
இன்றைய சூழ்நிலையில், வேகமான உலகத்தில் ஒரு சிறுவன் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான், அவனால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். தேவையின்றி இந்தப் படத்தைப் பாதிக்கும் விதத்தில் கருத்துக்களைச் சொல்பவர்கள் மீது சட்டப்பட நடவடிக்கை எடுக்க உள்ளேன்,” என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளதாக ஹைதராபாத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.